டயர் வெடித்தது ஸ்பைஸ் ஜெட் விமானம்

டெல்லி: டெல்லியில் இருந்து இன்று பிற்பகல் ஸ்ரீநகர் புறப்பட்டுச் சென்ற ஸ்பைஸ் ஜெட் பயணிகள் விமானத்தில் டயர் வெடித்தது. இதையடுத்து அந்த விமானம் மீண்டும் டெல்லிக்கு திருப்பி அழைக்கப்பட்டு, தரையிறக்கப்பட்டது.

அகமதாபாத்தில் இருந்து டெல்லி வழியாக இந்த விமானம் ஸ்ரீநகர் சென்றது. டெல்லி விமான நிலையத்திலிருந்து பகல் 2 மணிக்கு விமானம் புறப்பட்டது. போயிங் 737 ரகத்தைச் சேர்ந்த விமானத்தில் 186 பயணிகள் இருந்தனர்.

அந்த விமானம் சென்ற சில நிமிடங்களில், தரையிறங்கிய இன்னொரு விமானத்தின் விமானிகள் ஓடு தளத்தில் டயர் துண்டுகள் சிதறி கிடப்பதைப் பார்த்து உடனடியாக தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அது ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் டயர் துண்டுகளாகத் தான் இருக்க வேண்டும் என்று கருதிய தரைக்கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் உடனே அந்த விமானத்தை டெல்லிக்கு திருப்புமாறு உத்தரவிட்டனர்.

அதற்குள் 15 நிமிடங்கள் ஓடிவிட்டன. இந்த நேரத்துக்குள் அந்த விமானம் 150 கி.மீ. தூரம் வரை பயணித்துவிட்டது. ஆனாலும், அந்த விமானம் உடனடியாக டெல்லிக்கு திருப்பப்பட்டது.

அனைத்து பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த விமானம் டெல்லிக்கு திரும்பி வந்தது.

விமானத்தை குறைந்த உயரத்தில் பறக்க வைத்து தொலைநோக்கிகள் மூலம் பார்த்தபோது அதன் வலது பக்க டயர்களில் ஒன்று வெடித்துள்ளது உறுதியானது.

இதையடுத்து விமானத்தை அதற்கேற்றார் போல தரையிறங்குமாறு (smooth sail landing) விமானிகளுக்கு உத்தரவிட்டனர்.

பின்னர் டயர் மாற்றப்பட்ட அந்த விமானம் ஸ்ரீநகருக்கு புறப்பட்டுச் சென்றது.

-nesan-