சிலை திறப்பும், சீரழியும் வரிப்பணமும்…

குழந்தை ஒன்று அன்னைக்கு அருகில் உறங்கிக் கொண்டிருக்கிறது. அதன் முகத்தில் கொத்துக் கொத்தாக ஈக்கள் மொய்க்கின்றன. மூக்கிலும், முகத்திலும் உள்ள அழுக்குகளால் ஈர்க்கப்பட்ட ஈக்களை தூக்கக் கலக்கத்திலேயே பிஞ்சுக் கைகள் துரத்துகின்றன. ஆனால் ஈக்கள் தூரப் போக மறுக்கின்றன. மீண்டும் மீண்டும் ஈக்கள் அந்தக் குழந்தையின் முகத்தில் படையெடுத்துத் தாக்கிக் கொண்டிருக்கின்றன.
அதிகாலை நேரத்தில் இரயி­ல் இருந்து இறங்கி மண்ணடி சாலையில் நடந்து கொண்டிருக்கும் போது இந்த அலங்கோலக் காட்சி கண்ணில் படுகின்றது. காண்போர் இதயங்களைக் கனக்கச் செய்கிறது. கண்களில் நீரை வரவழைக்கின்றது.
அவர்கள் உண்ணுவதும், உறங்குவதும் அங்கு தான். அவர்கள் சமைப்பதும், சட்டி சாமான்கள் கழுவுவதும் அங்கு தான். குளிப்பதும், துவைப்பதும் அந்த இடத்தில் தான். அங்கு நாய்களும், பன்றிகளும் நடமாடிக் கொண்டிருக்கும். கொளுத்துகின்ற வெயிலானாலும், கொட்டுகின்ற மழையானாலும் அந்த வீதிகள் தான் அவர்களின் வீடுகள். தாம்பத்ய வாழ்க்கைக்குக் கூட தகுந்த மறைவிடம் இன்றி தவித்து, தத்தளித்து அந்தத் தரைப் படையினர் தங்கள் வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
சென்னைப் பட்டணத்தின் அகன்ற வீதிகளில் இது போன்று ஆயிரமாயிரம் அவலக் காட்சிகள்.
இப்படி ஒரு சாரார் குடிசை கூட இல்லாமல் தரைப் பிராணிகளாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
கூவம் நதிக் கரையில் குடிசை மக்கள்

சிங்காரச் சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்கின்ற போது, குபீரென்று ஒரு வாடை குடலைப் புரட்டுகின்றது. மக்கள் தங்கள் மூக்கைப் பொத்தத் துவங்குகின்றனர். கூவம் நதியைக் கடந்ததும் மூக்கிலிருந்து கையை எடுக்கின்றனர். கொஞ்ச நேரம், பேருந்து கூவம் நதியைத் தாண்டுவதற்குள்ளாக மக்களுக்கு அதன் வாடை குமட்டலைக் கொடுக்கின்றது; குடலைப் புரட்டுகின்றது.

ஆனால் அந்தோ பரிதாபம்! 24 மணி நேரமும் கூவம் நதிக் கரையினில் குடிசை கட்டிக் கொண்டு ஏழைக் குடும்பங்கள் குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். நாற்றத்துடன் நாற்றமாக அவர்களது வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கின்றது.

இப்படி ஒரு சாரார் தங்கள் வாழ்க்கையைக் கூவத்தில் கழித்துக் கொண்டிருக்கின்றனர்.
இத்தகைய மக்களுக்கு மாற்று வழி ஏற்படுத்தாத அரசாங்கம், போட்டி போட்டுக் கொண்டு சிலைகளைத் திறப்பதில் மக்கள் வரிப் பணத்தை வாரியிறைத்து, பாழாக்குகின்றது.
கடந்த ஆட்சியில் வீழ்த்தப்பட்ட கண்ணகி சிலையை இந்த அரசு பொறுப்பேற்றதும் முதல் வேலையாக மீண்டும் நிறுவுகின்றது.
கண்ணகி சிலை இல்லாததால் ஐந்தாண்டு காலமாக யாரும் சாப்பிட வழியில்லாமல் திரிந்தது போன்று ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக கண்ணகி சிலை திறக்கப்பட்டது.
இப்போது திரைப்பட நடிகர் சிவாஜிக்கு சிலை!

கோடிக்கணக்கான மக்கள் வரிப்பணம் கற்சிலை நடுவதிலும் கல்லறை கட்டுவதிலும் காலி செய்யப்படுகின்றது. சிலை அமைப்பதற்கு மட்டும் செலவு செய்யப்படுவதில்லை. அதைத் திறந்து வைப்பதற்கு அரசு விழாக்கள் என்ற பெயரில் கோடிக்கணக்கில் செலவு செய்யப்படுகின்றது.
இது போதாதென்று கடற்கரையில் இருக்கும் காந்தி சிலையை, சிவாஜி சிலை மறைக்கின்றது; அதனால் வேறு இடத்தில் சிலையை நிறுவ வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குகள் வேறு!

மேலும் படிக்க..