சவூதியில் மன்மோகன் சிங்கிற்கு சிறப்பான வரவேற்பு!

ரியாத்: இந்திய பிரதமர்  மன்மோகன் சிங்  மூன்று நாள் பயணமாக இன்று சவூதி அரேபியா தலைநகர் ரியாத் சென்றடைந்தார். அவரை சவுதி பட்டத்து இளவரசர் சுல்தான் பின் அப்துல் அஜிஸ் ரியாத் விமான நிலையத்தில் வரவேற்றார்.  கடந்த 28 ஆண்டுகளில் சவூதி அரேபியா செல்லும் முதல் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1982ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சவூதி சென்றிருந்தார் அவருக்கு பின் எவரும் செல்லவில்லை.

பிரதமரின் இந்த பயணத்தின்போது  தீவிரவாதிகள் உள்ளிட்ட குற்றவாளிளை ஒப்படைப்பது தொடர்பான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் உள்ளிட்ட 11 ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகவுள்ளது. பிரதமருடன் முகேஷ் அம்பானி, சசி ரூயா, ஆசிம் பிரேம்ஜி, டாடா தலைமை நிர்வாக அதிகாரி ராமதுரை உள்ளிட்ட தொழிலதிபர் குழுவும் செல்கிறது

நாளை மறுநாள் சவூதி அரேபிய ஷூரா கவுன்சிலில் உரை நிகழ்த்துகிறார் மன்மோகன் சிங்.  தனது சவூதி பயணத்தின்போது மன்னர் அப்துல்லாவை சந்திக்கிறார் பிரதமர். அப்போது இந்திய சவுதி இருதரப்பு உறவுகள் குறித்தும் பாகிஸ்தான், தலிபான் பிரச்சினை, பாலஸ்தீன பிரச்சினை உள்ளிட்டவை குறித்தும் அவர் அப்துல்லாவுடன் ஆலோசனை நடத்துவார்

மேலும் பிரதமர் வெளிநாடு வாழ் இந்திய சமுதாயத்தவர்களையும் சந்தித்து பேச இருக்கிறார், மேலும் சவூதி இந்திய இருதரப்பு வர்த்தக உறவுகள் கடந்த 2008-09 ஆம் ஆண்டுகளில் 25 மில்லியன் அமெரிக்க டாலார்களுக்கு மேல் இருந்த்து என்பது குறிப்பிடதக்கது

தனது பயணம் குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சவூதி அரேபியப் பயணம் சிறப்பான முக்கியத்துவம் கொண்டதாகும். இரு நாடுகளுக்கும் இடையே, பாதுகாப்பு, அறிவியல் தொழில்நுட்பம், விண்வெளி, மனித வளம், அறிவு சார் தொழில் துறை ஆகியவற்றில் புதிய வளர்ச்சி காண இந்தப் பயணம்  மிகவும் உதவும் என்றார்.

நன்றி:இந்நேரம்.காம்