காயிதேமில்லத் திடலில் நடைபெற்ற பெருநாள் தொழுகை

ஷவ்வால் பிறை காணப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடையநல்லூரில் 3 இடங்களில் திடலில் தொழுவதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதில் காலை 6 மணி அளவில் கடையநல்லூரைச் சார்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியப் பெருமக்கள் ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் குளித்துவிட்டு. புத்தாடைகள் அணிந்து தொழுகைத் திடலை நோக்கி வரத்துவங்கினர். இவர்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள் பேரீத்தம்பழம் மற்றும் இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர். 
காயிதே மில்லத் ஈத்கா திடலில் சரியாக 6.30 மணி அளவில் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் நோன்பு பெருநாள் தொழுகை நடத்தினார். அதைத் தொடர்ந்து மக்களுக்கு ஆற்றிய உரையில்- இஸ்லாம் என்பது சாந்தியையும் அமைதியையும் போதிக்கக் கூடிய மார்க்கம் கடந்த ஒரு மாத காலம் உண்டு, பருகி, மனைவியோடு உறவு கொண்டு இன்புற்றிருக்க வேண்டிய முஸ்லிம்கள் பகல் முழுக்க இவைகளையெல்லாம் விலக்கிக் கொண்டனர். யார் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் படைத்த ஏகப் பரம்பொருhகிய அல்லாஹ் பார்க்கிறான் என்ற எண்ணம்தான். இது உலக மக்கள் அனைவருடைய உள்ளத்திலும் ஏற்பட்டு விட்டால் லஞ்சம், ஊழல், மோசடி, தீவிரவாதம் போன்ற அநியாயங்கள். அக்கிரமங்கள். அக்கிரமங்கள் ஏற்பட வாயப்பில்லை.  இஸ்லாம் ஒருபோதும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை. ஒரு உயிரை
வாழவைத்தவன் உலகமக்கள் அனைவரையும் வாழவைத்தவன் போன்றாவான். நியாயமின்றி அநியாயமாக ஒரு உயிரை கொலை செய்பவன் உலகமக்கள் அனைவரையும் கொலைசெய்தவனாவன் என்று திருக்குர்ஆன் தீவிரவாதத்திற்கு எதிராக உரக்க குரல் கொடுக்கின்றது. நோன்புப் பெருநாளில் கூட இஸ்லாமியர்கள் ஏழைகளின் பசிப் பணியைப் போக்குவதற்காக ஈகையுடன் நோன்புப் பெருநாள் தர்மத்தை நிறைவேற்றுகின்றனர். இத்தகைய ஈகைப் பண்பை ஏற்படுத்துவதுதான் இஸ்லாம் என்று அவர் தன்னுடைய பெருநாள் பேருரையில் எடுத்துரைத்தார்.
கடையநல்லூர் முழுவதிலும் இருந்து இஸ்லாமியப் பெருமக்கள் ஆர்வமுடன் பெரும் திரளாகக் கலந்து கொண்டு ஒருவருக் கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளை நிர்வாகிகள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

மேலும் 2 இடங்களில் திடல் தொழுகை

கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் 3 வது தெரு மர்யம் பள்ளிவாசல் வளாகத்தில் இஸ்லாமிக் கல்லூரி பேராசிரியர் மௌலவி அப்துந் நாஸிர் அவர்களும் மேலும் மக்காநகர் பள்ளிவாசல் சார்பில் மௌலவி பஷீர் அஹமது MISC அவர்களும் பெருநாள் தொழுகையும் அதைத் தொடர்ந்து மக்களுக்கு குத்பா பேருரையும் நிகழ்த்தினார்கள். அனைவரும் தங்களது உரைகளில் இஸ்லாம் கூறும் ஈகை பற்றி எடுத்துரைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மஸ்ஜித் மர்யம், மக்கா நகர் பள்ளிவாசல் நிர்வாகிகள் சிறப்பாகச் செய்திருந்தனர்.
தொழுகைக்கு முன்பாக கடையநல்லூர் நகரில் ஆயிரக்கணக்கான ஏழைஎளிய மக்களை கண்டரிந்து வீடு தேடி தலா 5கிலோ அரிசி வீதம் பித்ரா எனும் பெருநாள் தர்மம் வழங்கப்பட்டது.  
கூடுதல் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சொக்கலிங்கம் அவர்களின் மேற்பார்வையில் கடையநல்லூர் நகரக் காவல்துறை ஆய்வாளர் ஜெயராமன் தலைமையில் பெருநாள் தொழுகை நிகழ்ச்சிக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. 

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரித்தாக்குகிறோம்…!