ஓவியர் M.F.உசேனுக்கு கத்தார் நாட்டுக் குடியுரிமை இந்தியாவுக்கு அவமானம்!?

Imageஓவியர் எம்.எப். உசேனுக்கு கத்தார் நாட்டுக் குடியுரிமை சுதந்திரமாக நடமாடக்கூட அனுமதிக்காத இந்தியாவுக்கு அவமானம் : இந்தியாவின் முன்னணி ஓவியரான எம்.எப்.உசேனுக்கு கத்தார் நாடு குடியுரிமை வழங்கி கவுரவித்துள்ளது.

கத்தார் நாடு குடியுரிமை  வழங்கி இருப்பது குறித்து துபாயில் வசித்து  வரும் உசேன் தன் கைப்பட எழுதிய அறிவிப்பை சென்னையிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அனுப்பி இருக்கிறார்.

இரட்டைக் குடியுரிமையை இந்தியா ஏற்றுக் கொள்ளாது. ஆனால் வெளிநாட்டு வாழ் இந்தியக் குடிமகன் என்ற தகுதியை மட்டுமே இந்தியர் ஒருவர் பெறமுடியும். எனவே உசேன் பிறந்து, வளர்ந்து கொண்டாடப்பட்ட இந்திய மண்ணின் குடி உரிமையை அவர் துறக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

கத்தார் நாட்டின் குடியுரிமை கோரி அந்நாட்டு அரசாங்கத்திடம் உசேன் விண்ணப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய ஓவியங்களின் சிறப்பை அறிந்த கத்தார் நாட்டு அரசு அவருக்கு அந்நாட்டு குடியுரிமை வழங்கி கவுரவிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

இந்து கடவுள்களை ஓவியம் மூலம் விமர்சித்ததால் அவருக்கு எதிராக இந்தியாவில் உள்ள சங்பரிவார் கும்பல் வரிந்து கட்டிக் கொண்டு களம் இறங்கியது. இதனால் அவருக்கு எதிராக பல்வேறு கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டன. அவர் வரைந்த ஓவியங்கள் கூட காவிக் கும்பலால் அடித்து நொறுக்கப்பட்டன. அவருடைய ஓவியக் கண்காட்சியையும் பல்வேறு இடங்களில் சங்பரிவாரக் கும்பல் சீர்குலைத்தது.Image

இந்துத்துவா கும்பலின் தொடர் தொல்லைகளால் அவர் 2006 ஆம் ஆண்டு முதல் துபாயிலும், லண்டனிலும் மாறிமாறி வசித்து வருகிறார். இந்தியாவில் பிறந்த இந்தியக் குடிமகனான அவர், இந்தியாவைத் தவிர வேறு எந்த  உலக நாடுகளிலும் அவரால்  சுதந்திரமாக வலம் வரமுடிகிறது. ஆனால் இங்குள்ள இந்துத்துவா கும்பல் அவருடைய உயிருக்கு குறிவைத்து அலைவதால் அவரால், இந்தியாவில் நடமாடக் கூட முடியவில்லை.  அவருக்கு எதிராக இந்திய நீதிமன்றங்களில் 900-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வெளிநாட்டில் தஞ்சம் புகுந்திருக்கும் உசேனை, இந்தியாவுக்கு  மீண்டும் திரும்ப வரவழைத்து காவிக்கும்பலிடமிருந்து காப்பாற்றி அவருக்கு போதிய பாதுகாப்பு அளிக்க  இந்திய அரசின் நிர்வாகத்திற்கு ஆண்மை இல்லை.  இந்தியாவின் பாஜக, காங்கிரசு கூட்டணி ஆட்சிகள் இரண்டுமே உசேனின் கருத்துச் சுதந்திரத்தைக்  காப்பாற்ற  எவ்வித ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளும் எடுக்கவில்ல்லை என்பதுதான் உண்மை.

உசேனுக்கு எதிரான  சங்பரிவாரின் தொல்லைகள் 1996 முதல்  தொடங்கிவிட்டன. 1970-களில் அவர் வரைந்த ஓவியங்களை இந்தி மொழி பத்திரிகை 1996-ல் வெளியிட்டது. இந்த ஓவியம் இந்துக் கடவுளை அவமதிப்பதாக அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த ஓவியத்தின் மூலம் இந்து மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டதாக இந்துத்துவாவாதிகள் எதிர்க் கூச்சலிட்டனர். அன்றுமுதல் காவிக்கூட்டம்  உசேனை தொடர்ந்து துரத்தி வருகிறது. இந்தியாவின் கலாசார மதிப்புகளை தூக்கிப் பிடிப்பதில் யாருக்கும் குறையில்லாத எம்.எப்.உசேனுக்கு இந்தியாவில் நிம்மதியாக வாழக்கூட முடியாத நிலை. இதனால்தான் வேறுவழி தெரியாத அவர் வெளிநாட்டில் அடைக்கலம் புகுந்தார். மதசார்பற்ற இந்தியக் குடியரசு  தேசம் அவருடைய கருத்துச் சுதந்திரத்தை நிலைநிறுத்துவதற்கும் அவருடைய  உயிருக்கு பாதுகாப்பு அளிப்பதற்கும்  எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இதுதான் இந்த தேசத்தின் படைப்புச் சுதந்திரமும், படைப்பாளியின் பாதுகாப்பு முறையும்?   மத ரீதியாக எழுந்துள்ள உசேன் விவகாரத்தில் மதசார்பற்ற இந்திய தேசத்தின் அணுகுமுறை வெட்கக் கேடான ஒன்றே என்பதில் எவ்வித ஒளிவுமறைவுமில்லை.

இதுகுறித்து உச்ச நீதிமன்றம்  தாமதமாக தலையிட்டும் கூட  எம்.எப்.உசேனின் கருத்துச் சுதந்திரம் காப்பாற்றப்படுவதில் எவ்வித  முன்னேற்றமும் இல்லை.

Imageகோயில்களிலும், கஜூரோ சிற்பங்களிலும் வடிக்கப்பட்டுள்ள  ஆபாசமான பாலியல் ரீதியான ஓவியங்கள் வணங்கப்படும் நிலையில், இந்து  கடவுளை உசேனின்  ஓவியங்கள் ஆபாசமாக சித்தரிப்பதாக காவிக்கும்பல்  கூக்குரலிட்டு வருகிறது. இதனால் மதசார்பற்ற நாடு என்று சொல்லப்படும் இந்தியாவில் அவரால் சுதந்திரமாக தமது கருத்துகளை வெளியிடவும், நடமாட முடியாத நிலையும் உள்ளது.

Imageஇந்நிலையில் 95 வயதான உசேன், துபாயில் தங்கி ஓவியங்கள் வரைந்து வருகிறார். தற்போது வியாபார நோக்கில் அவர் ஓவியங்கள் வரையாமல், இந்திய மற்றும் அரேபிய கலாசாரத் தொடர்புகள் குறித்த ஓவியங்களை வடிவமைப்பதில் ஈடுபட்டுள்ளார். உசேனின்   சிந்தனை வளமிக்க ஓவியம் பற்றி அறிந்த  அய்க்கிய அமீரகத்தின் கத்தார் நாட்டு முதல் பெண்மணியும், அதிபரின் மனைவியுமான ஷேக் மோஷா,  உசேனினின் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த ஓவியங்களுக்கு மதிப்பளிக்க முன்வந்துள்ளார். இரு நாட்டு கலாசார உறவுகள் தொடர்பாக உசேனால்  வரையப்படும் ஓவியங்கள்,  தோஹா நகரில் உள்ள தனி அருங்காட்சியகத்தில் வைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனை அடுத்து கத்தார் தேசம், உசேனுக்கு குடியுரிமை வழங்கி கவுரவிப்பதாகவும் அறிவித்துள்ளது. அந்நாடு வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவது என்பது மிகவும் அபூர்வம். ஆனால் எம்.எப்.உசேனுக்கு அந்த  உயரிய மரியாதை வழங்க அத்தேசம் முன்வந்துள்ளது.  அதேவேளை ஒரு மிகச்சிறந்த சிந்தனை வளம் கொண்ட  ஓர்  ஓவியரை இந்த தேசத்தில் சுதந்திரமாகக் கூட நடமாட முடியாமல்  செய்திருப்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் வருத்தம் தரக்கூடிய ஒன்றே. இந்த நாள் இந்தியாவின் துயரம் நிறைந்த நாளே.

நன்றி: http://www.adhikaalai.com