அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு வழக்கில் சுவாமி அசீமானந்த் கைது!

ஹைதராபாத் மக்கா மசூதி குண்டு வெடிப்பு மற்றும் சம்ஜெளதா விரைவு ரயில் குண்டு வெடிப்பு உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஒப்புதல் வாக்கு மூலமும் அளித்துள்ள சுவாமி அசீமானந்த் அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பில் இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த சுவாமி அசீமானந்த் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்தார். அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு அஜ்மீர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஏற்கனகே கைது செய்யப்பட்டு தேசிய உளவு நிறுனத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த சுவாமி அசீமானந்தை ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்புக் காவல் படையினர் தங்களது பாதுகாப்பில் எடுத்து அஜ்மீர் நீதிமன்றத்தில் சனிக்கிழமையன்று முன்னிலைப்படுத்தினர்அவரை 2 நாள் காவலில் வைத்து விசாரித்து மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மாஜிஸ்ட்ரேட்டு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து தீவிரவாதத் தடுப்புப் படையினர் சுவாமி அசீமானந்தை தங்கள் காவலில் விசாரணைக்குக் கொண்டு சென்றனர். திங்கள் கிழமை மாலை மீண்டும் அவர் அஜ்மீர் மாஜிஸ்ட்ரேட் முன் முன்னிலைப்படுத்தப்படுவார்.

ஹைதரபாத் மக்கா மசூதி, மாலேகான் குண்டு வெடிப்பு மற்றும் சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள அசீமானந்த், ஹைதராபாத் குண்டு வெடிப்பில் தவறாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்து முஸ்லிம் கைதி ஒருவரின் நன்னடத்தையைத் தொடர்ந்து, ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.