ஒபாமாவை பிடித்து கொடுத்தால் 10 மில்லியன் பவுண்ட் : பிரிட்டிஷ் எம்.பி

லண்டன் : அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை பிடித்து கொடுப்பவருக்கு 10 மில்லியன் பவுண்ட் வழங்கப்படும் என்று அறிவித்த பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் தொழிலாளர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

2008 மும்பை தாக்குதலில் பங்குண்டு என்று கூறி பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சையத்தை பிடித்து கொடுத்தால் 10 மில்லியன் டாலர் கொடுக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்தது.

ஹபீஸ் சையது தலைக்கு விலை வைத்த அமெரிக்காவின் செயல் உலக முஸ்லீம்களை இழிவுபடுத்தும் செயல் என்று கூறிய லார்ட் நசீர் அஹ்மது ஒபாமாவையும் புஷ்ஷையும் பிடித்து கொடுத்தால் 10 மில்லியன் பவுண்ட் அளிப்பதாக கூறியதாக டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

லார்ட் அஹ்மதின் இத்தகைய கருத்துகள் ஏற்று கொள்ள முடியாதவை என்று கூறிய தொழிலாளர் கட்சி தற்காலிகமாக அவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது. தான் அவ்வாறு ஒபாமாவின் தலைக்கு விலை வைக்கவில்லை என்று கூறியுள்ள லார்ட் அஹ்மது ஈராக்கிலும் ஆப்கனிலும் நடத்திய கொடூரங்களுக்காக புஷ்ஷூம் டோனி ப்ளேயரும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று மட்டும் தான் கூறியதாக சொன்னார்.