இஸ்லாமிய மத சட்டத்திற்குட்பட்டு அரசாட்சி செய்வதாகக் கூறும் சவூதி அரபியாவில், இனி பெண்களும் சுயமாகத் தேர்தலில் நிற்கவும், தம் விருப்பப்படி வாக்களித்துத் தேர்ந்தெடுக்கவும் செய்யலாம் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷூரா கவுன்சில் எனப்படும் சவூதியின் நாடாளுமன்றமான ‘அரசாலோசனை மண்டபம்’ நேற்று மீண்டும் கூடிய போது, சவூதி மன்னர் அப்துல்லாஹ் இந்த வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை பலத்த கையொலி வரவேற்புகளுக்கிடையே வெளியிட்டார். “இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே, மூத்த மார்க்க அறிஞர்களின் ஆலோசனை பெற்றே இவ்வறிவிப்பு செய்யப்படுகிறது” என்றார் மன்னர்.
எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் முதல் சவூதி பெண்டிர் தேர்தலில் நின்று வென்று ஷூரா கவுன்சிலிலும் பங்கு பெறலாம் என்றும் தேர்தலில் வாக்குரிமையும் பெண்களுக்கு வழங்கப்படுகிறது என்றும் மன்னர் தனது ஐந்து நிமிட தொடக்க உரையில் குறிப்பிட்டார். (இரண்டாவது கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கு எதிர்வரும் வியாழன் அன்று சவூதி நாடு தயாராகி உள்ளது இங்குக் குறிப்பிடத்தக்கது)
. “இது மகத்தான நற்செய்தி, இறுதியில் பெண்குரல் செவிசாய்க்கப்பட வழி கோலப்பட்டுள்ளது ” என்று சவூதி எழுத்தாளரும், பெண்ணுரிமைப் பேராளருமான வஜிஹா அல் ஹுவைதர் மன்னரின் அறிவிப்பை மகிழ்ந்து வரவேற்றுள்ளார். “பெண்களுக்கான மற்ற தடைகளையும், குறிப்பாக வாகனம் ஓட்டுவதில் , ஆண் துணையின்றி விழாக்கள் நடத்துவதில் உள்ள கட்டுப்பாடுகளையும் நீக்க வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
Filed under: பொதுவானவை |
மறுமொழியொன்றை இடுங்கள்