மூடிக் கிடக்கும் கடையநல்லூர் ரயில் நிலைய கழிப்பிடம்-மக்கள் பெரும் அவதி

கடையநல்லூர்: வளர்ந்து வரும் முக்கிய நகரமான கடையநல்லூரில் உள்ள ரயில் நிலைய வளாகத்தில் இருக்கும் கழிப்பிடம் மூடியே கிடப்பதால் பயணிகள், குறிப்பாக பெண்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில், கடையநல்லூர் வளர்ந்து வரும் நகரமாகும. இங்கு ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கனக்கானோர் துபாய், சவுதி அரேபியா, குவைத் போன்ற வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர்.

அத்துடன் இப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் சென்னை, கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் தொழில் செய்தும், பணிபுரிந்தும் வருகின்றனர். இதனால் கடையநல்லூர் ரயில்வே ஸ்டேசன் ரயில் நேரங்களில் மிகவும் கூட்டமாக இருக்கும். தற்போது கடையநல்லூர் வழியாக மதுரைக்கும், சென்னைக்கும், ரயில் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் கடையநல்லூர் ரயில்வே ஸ்டேசனில் கழிப்பறை செயல்படாமல் இருப்பதால் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக பெண்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து ரயில்வே அதிகாரியிடம் கேட்டால் ரயிலில் ஏறி கழிப்பறை செல்லுமாறு பொறுப்பின்றி அலட்சியமாக கூறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் பயணிகளுக்கும் ரயில்வே அலுவலர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது. அத்துடன் ரயில் நிலையத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீரும், சுகாதாரமான சூழ்நிலையும் இல்லை என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதேபோல பயணிகள் காத்திருக்கும் அறையும் திறந்து வைக்கப்படாமல் பூட்டியே இருப்பதாகவும் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது.

உலக அளவில் புகழ் பெற்றதாக கூறப்படும் இந்திய ரயில்வே, நிர்வாக மேலாண்மை குறித்து ஐஐஎம் போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்யும் இந்திய ரயில்வே, இப்படி பயணிகளுக்கு குறைந்தபட்ச வசதிகளை கூட செய்து தர மறுப்பது எந்தவகையில் நியாயம் என்று பொதுமக்கள் குமுறுகின்றனர்.

பயணிகள் நலன் கருதி கடையநல்லூர் ரயில்வே ஸ்டேசனில் கழிப்பறை செயல்பட நடவடிக்கை எடுக்கவும், குடிநீர் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தவும் ரயில்வே துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் விரும்புகின்றனர்.

thatstamil