மத வன்முறை தடுப்பு சட்டத்திற்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம்.

மத வன்முறையை தடுக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வர உள்ள ”மத மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு” சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வன்மையாக கண்டிக்கின்றது.
கலவரத்தை தடுக்க மத்திய அரசு கொண்டு வரும் சட்டத்தை ஒரு மாநில முதல்வர் எதிர்ப்பது விசித்திரமாக உள்ளது. இதற்கு தமிழக முதல்வர் சொல்லும் காரணங்கள் ஏற்கதக்க வகையில் இல்லை.
இந்த சட்டம் ஏதோ அவசரகோலத்தில் உருவாக்கப்பட்ட சட்டம் அல்ல, இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் நடந்த கலவரங்களில் சிறுபான்மை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர், குற்றவாளிகள் சரியான முறையில் தண்டிக்க படவில்லை, மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படவில்லை என அரசால் நியமிக்கப்பட்ட பல கமிஷன்கள் கூறியுள்ளன.
கலவரங்களை விசாரிக்க நீதிபதிகளின் தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது தான் இந்த ‘மத மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு சட்டம்”.

மேலும் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலுக்கு முந்தைய தேர்தலில் அளித்த தேர்தல் அறிக்கையின் அடிப்படையிலும், கடந்த தேர்தலில் அளித்த தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையிலும், பல்வேறு சட்ட வல்லுனர்களின் ஆலோசனைபடி தான் இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
எனவே இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என தமிழக முதல்வர் கூறியிருப்பது ஏற்கதக்க வகையில் இல்லை.
மனித உயிர்களைவிட மாநில உரிமை பெரிதல்ல என்பதை முதல்வர் உணர்ந்துகொள்ள வேண்டும், எனவே தமிழக முதல்வர் இந்த சட்டத்தை ஆதரிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கேட்டுகொள்கின்றது,
இந்தியாவில் கலவரங்களில் ஈடுபடும் சமூகவிரோதிகளை தண்டிக்கவும், கலவரத்தில் பாதிக்கபட்டோருக்கு நிவாரணம் வழங்கவும், சட்டம் இயற்றிய மத்திய அரசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பாராட்டுகின்றது
 
இப்படிக்கு
P. ஜெய்னுல் ஆபிதீன்
மாநில தலைவர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை தழுவினார்.

ஜோஹன்ஸ்பெர்க் : தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் இளம் வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொண்டுள்ளார். இன்று 22ம் ஆண்டை அடையும் அவர் இஸ்லாத்தை பற்றிய சில கால ஆராய்ச்சிக்கு பிறகு இம்முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பர்னெல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாண்டு ஜனவரி மாதமே தான் இஸ்லாத்தை ஏற்று கொண்டதாகவும் தன் பெயரை வலீத் என மாற்றும் எண்ணமுள்ளதாகவும் தெரிவித்தார். தற்சமயம் வரை தன் பெயரான வெய்ன் தில்லன் பர்னலை மாற்றவில்லை என்றும் எதிர்காலத்தில் புதிதாய் பிறந்த மகன் என பொருள்படும் வலீத் என்ற பெயரை வைக்க நினைப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவ்வறிக்கையில் தான் முதல் முறையாக ரமலான் மாதத்தை அடைய இருப்பதால் தான் முதன் முறையாக நோன்பு இருப்பதை குறித்து மிக சந்தோஷமாக இருப்பதாகவும் தெரிவித்தார். தென் ஆப்பிரிக்க மக்களும் ஊடகங்களும் தன் கிரிக்கெட் ஆட்டத்தில் காட்டும் ஆர்வத்தை மதிக்கும் அதே வேளையில் எந்நம்பிக்கையை ஏற்பது என்பது தனது தனிப்பட்ட உரிமை என்றும் கூறியுள்ள அவர் அதை மதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் மேலாளர் முஹம்மது மூஸாஜீ பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொள்வது அவரின் தனிப்பட்ட விஷயம் என்றும் இவ்விஷயத்தில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டின் முஸ்லீம் வீர்ர்கள் ஹாஷிம் அம்லா மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் பர்னெல் இஸ்லாத்தில் தீவிரமாக உள்ளதாகவும் சமீபத்திய ஐ.பி.எல் போட்டியிலிருந்து ஒரு சொட்டு மதுவும் அருந்தவில்லை என்றும் தெரிவித்தனர். இதில் அம்லாவின் பங்கு ஏதுமில்லை என்றாலும் ஹாஷிம் அம்லா மிக கட்டுபாட்டுடனும் தன் மதத்தை பின்பற்றுவதில் காட்டும் உறுதியும் அனைவரையும் ஈர்த்துள்ளது என்றனர். ஹாஷிம் அம்லா இஸ்லாத்தின் ரோல் மாடலாக விளங்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் மது பரிமாறப்படும் கேளிக்கைகளில் பங்கேற்க மறுப்பது, சுற்றுபயணத்தில் கூட தன் தொழுகைகளில் உறுதியாய் இருத்தல், தென் ஆப்பிரிக்க அணியினரின் ஸ்பான்ஸரான பீர் நிறுவனத்தின் லோகோ பொறிக்கப்பட்ட ஆடையை அணிய மறுப்பது போன்றவைகளின் மூலம் அவரை அறியாமலேயே ஹாஷிம் அம்லா பிறர் இஸ்லாத்தின் மீது நல்லெண்ணம் தோன்ற காரணமாக இருக்கின்றனர் என்றனர். 2006 ஆம் ஆண்டு யூசுப் யோஹன்னவாக இருந்து இஸ்லாத்திற்கு மாறிய முஹம்மது யூசுப்பை தொடர்ந்து இஸ்லாத்தை ஏற்று கொண்ட இரண்டாவது கிரிக்கெட் வீர்ர் பர்னெல் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை தொடர் குண்டுவெடிப்புகள் விசாரணை என்ற பெயரில் வதைத்துக் கொல்லப்பட்ட ஃபயாஸ் உஸ்மான் தடம் புரளும் புலனாய்வுத்துறை??

ஜூலை 13ம் தேதி மும்பையில் நிகழ்ந்த தொடர்குண்டு வெடிப் புகளில் 21 பேர் பலியானார்கள்; 144 பேர் படுகாயமடைந்தனர். மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதிகளான ஒபேரா ஹவுஸ், ஜாவேரி பஜார், தாதர் பகுதிகளில் இந்த குண்டுவெடிப்புகளை சதிகாரர்கள் நிகழ்த்தியதன் மூலம் இந்தக் கொடியவர்கள் தாங்கள் ஒரு மனிதகுல விரோதிகள், இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்கள்.

 இத்தகைய கொடிய செயலை செய்பவர்கள் யார்? இவர்களது பின்னணியில் இயங்கும் உள்நாடு மற்றும் அயல்நாட்டு சக்திகள் எவை என்பதில் வழக்கம் போலவே புலனாய்வு அமைப்புகள் திணறி வருகின்றன.

நாட்டையே உலுக்கிய இந்த பயங்கரவாதச் செயலை செய்தவர் கள் யார்? என்பதைக் கண்டறிய தீவிரமாக நடுநிலைமையுடன் செயல்படாமல் மீண்டும் தங்களது வழக்கமான, கீழ்த்தரமான, முட்டாள் தனமான, முன்யோ சனை யற்ற, ஒருபக்க சார்பான விசாரணையை மேற்கொண்டு நாட்டையே சர்வதேச அவமானத் தில் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது மகாராஷ்ட்ரா காவல் துறை.

ஃபயாஸ் உஸ்மான் என்ற 35 வயது இளைஞரை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று பின்னர் மும்பை சியான் மருத்துவமனையில் இறந்துவிட்டார் என குடும்பத்தினரிடம் மிகவும் துணிகரமாக சொல்லியிருக்கிறது. மகாராஷ்ட்ரா அரசு.

காவல்துறையினர் ஃபயாஸ் உஸ்மானை சித்திரவதை செய்து படுகொலை செய்து விட்டதாக கதறுகின்றனர் அவரது உறவினர்கள்.

ஹைபர் டென்ஷனில் பாதிக்கப் பட்டு இருந்த ஃபயாஸ் உஸ்மானை அச்சுறுத்தி, உருட்டி மிரட்டியே சாகடித்துள்ளனர் பாவிகள் என குமுறுகின்றனர் ஃபயாஸின் உறவி னர்கள்.

தனது தந்தையை சம்பவம் நடந்த அன்று இரவு 7 மணிக்கு யூனிபார்ம் அணியாத சில மர்ம மனிதர்கள் அழைத்துச் சென்றதாகவும், தங்களிடம் அது குறித்து எவ்விதத் தகவலும் தெரிவிக்காமல் இழுத்துச் சென்றதாகவும் படு கொலை செய்யப்பட்ட ஃபயாஸ் உஸ்மானின் மகன் அஜீம் உஸ்மானி கூறுகிறார்.
ஃபயாஸ் உடல்நிலை மோச மடைந்து இருப்பதாவும் அவரை சியோன் மருத்துவ மனையில் சேர்த்துள்ளதாகவும் உடனடியாக பார்க்க வருமாறும் எங்களிடம் சொல்லப்பட்டது. ஆனால் நாங்கள் மருத்துவமனைக்கு சென்ற போது ஃபயாஸ் உஸ்மானின் இறந்த உடலைத்தான் பார்க்க முடிந்தது என வெடிக்கிறார் ஃபயாஸின் அண்டை வீட்டுக்காரர் சலீம் ஸித்தக்கி..  மேலும் படிக்க..

TNTJ-தலைமையகத்தில் PRESS MEET: உயிரை காப்பாற்றிக் கொண்டு அகதிகளாக சென்னை வந்த பாலகோட் முஸ்லிம்கள்! நெஞ்சை உருக்கும் வீடியோ காட்சி!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு என்ற ஊரில் இஸ்லாமியர்கள் எனக்கூறிக் கொண்டு மஹதி என்ற பிரிவினர் செயல்படுகின்றனர். இவர்கள் தமிழகத்தில் இந்த ஊரைத் தவிர வேறு எங்குமே இல்லை. இவர்கள், தங்களின் மதக் குருக்களின் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று அங்குள்ள முஸ்லிம்களை இத்தனை காலமும் நிர்பந்தித்து வருகின்றனர்..

பொதுவாக மஹதிகளைப் பொருத்தவரை ஒரு குணம் உண்டு. இவர்களை எதிர்க்கும் யாராக இருந்தாலும் அவர்களை அந்த ஊரில் உள்ள ஒரு தனிப்பள்ளிவாசலில் கட்டி வைத்து சித்ரவதை செய்வார்கள். முழுக்க முழுக்க இவர்கள் தங்களை ஒரு தனிப்பிரிவாகவே நினைத்துக் கொண்டு இஸ்லாம் காட்டித் தராத ஒரு தனி வாழ்க்கையை வாழ்கின்றனர்,

இந்த நிலையில் அங்கிருந்த மக்கள் சிலருக்கு ஏகத்துவக் கொள்கை கொஞ்சமாக ஊற்றெடுக்க, அவர்களின் கொள்கை இஸ்லாம் மார்க்கத்திற்கு முரணானது என்தைப் புரிந்து கொண்டு அங்குள்ள மஹதீகளுக்கு எதிராக அவர்களின் கொள்கைகளுக்கு எதிராக ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்யத் துவங்குகின்றனர்.

ஆனால் இந்த மக்கள் இதற்கு முன்னர் அந்தக் கூட்டத்தில் தான் இருந்து வந்தார்கள். அவர்களின் வழிமுறைகளைத் தான் பின்பற்றி வந்தார்கள். மேலும் படிக்க..

நித்தியானந்தாவுக்கு பட்டுக்கம்பளமா? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்

போலிச்சாமியார் நித்தியானந்தாவுக்கு பட்டுக்கம்பளம் விரிக்கும் தமிழக காவல்துறையைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைவர் பீ.ஜைனுல் ஆபிதீன் வெளியிடும் கண்டன அறிக்கை:

இந்து மக்களால் இளைய விவேகானந்தராகக் கருதப்பட்ட நித்தியானந்தா எனும் போலிச் சாமியார் தனது காமக்களியாட்டத்தினால் இந்துக்களின் கடும் கோபத்துக்கு உள்ளானார். இத்தகைய கேவலமான போலிச்சாமியாருக்கு தமிழகக் காவல்துறை பட்டுக் கம்பளம் விரித்ததன் மூலம் தன்மீது தானே காரித்துப்பிக் கொண்டது.

மக்களால் மதிக்கப்படும் ஒருவர் கேவலமான செயலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் கிடைத்தால் அதை வெளியிடுவதும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வது ஊடகங்களின் கடமையாகும். போலிச்சாமியாரின் லீலைகளை அம்பலப்படுத்திய ஊடகங்களுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டவர்கள் அளிக்கும் புகாரை தமிழகக் காவல்துறை பெற்றுக் கொண்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஊடகங்களின் உரிமையைப் பறிப்பதுமாகும்.

இது சித்தரிக்கப்பட்ட காட்சிகள் என்று நித்தியானந்தா கூறுவதை காவல் துறையினர் நம்பினால் அவர்கள் மாடுமேய்க்கத் தான் தகுதியானவர்களே தவிர காவல்பணிக்கு தகுதியானவர்கள் அல்ல. இது இந்து மதத்திற்கெதிரான தாக்குதல் என்று நித்தியானந்தா கூறுவதை காவல்துறை நம்பினால் அதைவிட முட்டாள்தனம் வேறு இருக்க முடியாது.

ஏனெனில் இது சித்தரிக்கப்பட்ட காட்சிகள் அல்ல என்று இந்துத்துவா கொள்கை கொண்ட கர்நாடக பாஜக அரசு சொல்லி விட்டது. அவர் மீது வழக்குப் பதிவு செய்ததும் பாஜக அரசு தான். ஓடி ஒளிந்து திரிந்த நித்தியானந்தாவை விரட்டிப்பிடித்து கைது செய்ததும் பாஜக அரசுதான். அவரை சிறையில் அடைத்தும் பாஜக் அரசு தான். பாஜக அரசு இந்து மதத்தின் மீது தாக்குதல் நடத்திவிட்டது என்று தமிழக் காவல் துறை கருதுகிறதா?
அவரது கேவலமான செயல் இந்து மதத்துக்கு கரும்புள்ளீயாக அமைந்ததாலேயே கர்நாடக அரசு அவரைக் கைது செய்து வழக்குப் போட்டுள்ளது என்பது மூளையுள்ள யாருக்கும் தெரியும்.

ஜெயலலைதாவின் முந்தைய ஆட்சியில் காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டாரே அது இந்து மதத்தின் மீதான தாக்குதலா? அவரை சிறையில் தள்ளியது இந்து மதத்துக்கு எதிரான நடவடிக்கையா? அவர் நீதி மன்றம் அழைத்துச் செல்லப்பட்ட போது அவர் மீது அழுகிய முட்டைகள் வீசப்பட்டதே அது இந்து மதத்துக்கு எதிரான செயலா? அவரது படத்துக்கு செருப்பு மாலை போடப்பட்டதும் செருப்பால் அடித்ததும் இந்து மதத்துக்கு எதிரான செயலா? நிச்சயமாக இல்லை. பகதர்களின் கொந்தளிப்பினால் தான் இவை நடந்தன. மேலும் ப்ல பெண்கள் காஞ்சி சங்கராச்சாரியாருக்கு எதிராகச் சொன்ன பாலியல் புகார்களை ஜெயா டிவி ஒளிபரபியதே அது இந்து மதத்தை இழிவு படுத்தும் செயலா?
காஞ்சி சங்கராச்சாரியார் நித்தியானந்தா வழியில் ஜெயா டிவி மீதும் ஜெயலலிதா மீதும் புகார் கொடுத்தால் அதை காவல் துறையினர் பதிவு செய்வார்களா?

நிச்சயம் பதிவு செய்யமாட்டார்கள். எனவே காவல் துறையினரின் இந்தப் போக்கு அருவருப்பானது. அசிங்கமானது. கேவலமானது. நித்தியானந்தாவின் செயலை விட மோசமானது என்று தமிழ்நாடு தவ்ஹீத் கடுமையாகக் கண்டிக்கிறது.

இப்படிக்கு,

பி.ஜைனுல் ஆபிதீன்

மாநிலத் தலைவர்

TnTj.Net

மும்பையில் மூன்று இடங்களில் குண்டு வெடிப்பு! 21 பேர் பலி!

Mumbai Blasts Photos
மும்பையில் நேற்று மாலை 6.45 மணியிலிருந்து 7 மணி வரை கால் மணி நேரத்திற்குள் ஜவேரி பஜார், ஓபரா ஹவுஸ், தாதர் மேற்கு ஆகிய இடங்களில் குண்டுகள் அடுத்தடுத்து வெடித்து மும்பையை அதிர வைத்தன.இந்த கோர சம்பவத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். 130க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குண்டுவெடிப்பில் ஐஇடி வகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் இந்தியன் முஜாஹிதீன் மற்றும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் இணைந்து இதை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மும்பையில் தற்போது என்ஐஏ குழுக்கள் முகாமிட்டு விசாரணையில் ஈடுபட்டுள்ளன. என்எஸ்ஜி கமாண்டோப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். டெல்லியிலிருந்தும், ஹைதராபாத்திலிருந்தும் மத்திய தடயவியல் அறிவியல் ஆய்வகக் குழுவினர் மும்பை வந்துள்ளனர்.

நேற்று இரவு மும்பையில் கன மழை பெய்ததால் பல முக்கியத் தடயங்கள் அழிந்திருக்கலாம் என்று போலீஸார் அஞ்சுகின்றனர். இருப்பினும் குண்டுவெடித்த இடங்களை முடிந்தவரை பாதுகாப்புடன் வைத்திருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

இதற்கிடையே, தாதர் மற்றும் ஓபரா ஹவுஸ் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆராயப்பட்டு வருகின்றன. இதில் சில உருப்படியான தகவல்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

thatstamil.oneindia