பாரிஸ் : “”குற்றவாளிகளைப் பிடிக்க, ரெட் கார்னர் நோட்டீசை பயன்படுத்துவதில் இந்தியா முன்னணியில் உள்ளது,” என, சர்வதேச போலீசின் செகரட்டரி ஜெனரல் ரொனால்டு கே.நோபிள் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: சந்தேகத்திற்குரியவர்களை கண்டறியவும், குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் சர்வதேச போலீசின் உதவியை நாடுவதில் இந்தியா முன்னணியில் உள்ளது. “இன்டர்போல்’ என்னும் சர்வதேச போலீஸ் அமைப்பு மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் கொடுத்து, குற்றவாளிகளை எளிதில் கண்டறிகிறது. ரெட் கார்னர் நோட்டீசின் முக்கியத்துவத்தை உணர்ந்த நாடுகளில், இந்தியா மிக முக்கியமானது. குற்றவாளிகளை கண்டறியவும், அவர்களைப் பிடித்துக் கொண்டு வரவும், நாடுகளுக்கு இடையே குற்றவாளிகளை பிடித்துத் தருவது தொடர்பான ஒப்பந்தம் இருக்க வேண்டியது அவசியம். சர்வதேச போலீசார் மூலம், ஒரு குற்றவாளி பற்றி ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்கும் போது, அந்த குற்றவாளி எளிதில் சுதந்திரமாக நாடுகளுக்கு இடையே உலவிட முடியாது.
ரெட் கார்னர் நோட்டீஸ் ஒரு சர்வதேச கைது வாரன்ட் இல்லை என்றாலும், அதன் மூலம் ஒருவரை கைது செய்யும்படி, உலக நாடுகளை குறிப்பிட்ட நாடு கேட்டுக் கொள்ள முடியும். குற்றவாளியைப் பிடித்து தங்களிடம் ஒப்படைக்கும்படி வேண்டுகோள் விடுக்கலாம். சர்வதேச போலீசின் தலைமையகம் பிரான்சில் உள்ளது. சர்வதேச போலீஸ் தன் திறனை மேம்படுத்தவும், உலக அளவில் அதன் பலம் அதிகரிக்கவும் இந்தியா மேலும் பல உதவிகள் அளிக்க வேண்டியது அவசியம். போலீசாரின் திறனை மேம்படுத்தும் பயிற்சி அளிப்பதில் இந்தியா முன்னணியில் உள்ளது. எனவே, திட்டமிட்ட குற்றங்கள், சைபர் குற்றங்கள் மற்றும் நிதி தொடர்பான உயர் தொழில்நுட்ப குற்றங்கள் போன்றவற்றிலும் சர்வதேச போலீசுக்கு பயிற்சி அளிக்க வேண்டியது அவசியம். அதற்கு இந்திய அரசு உதவ வேண்டும். சர்வதேச போலீசுக்கு இந்தியா மிகவும் முக்கியமான நாடு. அவ்வப்போது திறமையான அதிகாரிகளை அனுப்பி வைக்கிறது. அவர்களும் சர்வதேச போலீசில் திறமையாகச் செயல்படுகின்றனர். பயங்கரவாதம் உட்பட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக நிபுணர்களின் கூட்டம் நடக்கும் போதெல்லாம், அதில், இந்தியாவும் பங்கேற்கிறது. இவ்வாறு ரொனால்டு கே.நோபிள் கூறினார்.
Filed under: பொதுவானவை | Tagged: குற்றவாளிகளை-பிடிப்பதில |
மறுமொழியொன்றை இடுங்கள்