உள்ளத்தை இந்தியாவுக்கு இணக்கமாகத் திருப்ப வேண்டிய நேரத்தில், குறுகிய அரசியல் லாபங்களுக்காக பீ ஜே பீ காஷ்மீரில் கொடியேற்றும் நாடகத்தை நடத்த முயன்றது. பீ ஜே பீ இந்தியாவை ஆண்ட காலத்தில் காஷ்மீரும் இருந்தது; குடியரசு மற்றும் விடுதலைநாள் கொண்டாட்டங்களும் வந்தன; இப்போது கொடியேற்றுவதற்காகத் தனிவிமானத்தில் பறந்து சென்ற அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ஆனந்த குமார் போன்ற பி ஜே பீ தலைவர்களும் அந்தக் கட்சியில்தான் இருந்தனர். ஆனால் அப்போது அவர்களுக்கு அங்கே கொடியேற்றும் எண்ணம் வராத மர்மம் என்ன? இப்போது இந்தியாவை ஆளும் காங்கிரஸுக்கும் காஷ்மீரை ஆளும் ஓமர் அப்துல்லாவுக்கும் நெருக்கடி கொடுக்க நினைத்ததைத் தவிர வேறு நோக்கம் என்ன?
பீ ஜே பீ யின் கொடியேற்றும் திட்டத்தால் பிரிவினை பேசுவோரின் வலிமையும் அவர்களுக்கு மக்கள் ஆதரவும் கூடுமே தவிர அவர்களின் நெஞ்சங்கள் இந்தியாவிடம் நெருங்கா!
“இந்தியாவில் எங்கும் கொடியேற்றும் உரிமை உண்டு” என முழங்கும் பீ ஜே பீ க்கு, அவர்களின் தலைமைக் கட்சியான ஆர் எஸ் எஸ் தலைமையக நாக்பூர் அலுவலகத்தில் கடந்த இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்புவரை இந்தியத் தேசீயக்கொடி ஏற்றப்பட்டதில்லை என்ற உண்மை தெரியாதா?
நாட்டு விடுதலை நாளில் இந்நாட்டுக் குடிமக்களான முஸ்லிம்கள் தங்கள் அமைப்பு சார்பாக விடுதலைநாள் பேரணி நடத்தி மூவண்ணக் கொடியேற்றுவதற்கு எதிராகக் குரல் எழுப்பித் தடை கோர முயலும் சங்பரிவார் அமைப்புகளுக்கு, “இந்தியாவில் எங்கும் கொடியேற்றும் உரிமை உண்டு” என்பது வெற்றுக் கூச்சல்தானா?
நாட்டு விடுதலை மற்றும் தன்னாட்சி தொடர்பான நாட்களும் நாட்டுக் கொடியும் உணர்வு பூர்வமானவை; உண்மையான தேசபக்தனின் போற்றுதலுக்குரியவை. உண்மையான தேச பக்தர்கள் அவற்றைத் தம் குறுகிய ஆசை அல்லது லாபத்துக்காகப் பயன்படுத்த மாட்டார்கள். கோடிக்கணக்கான ஏழைப் பாட்டாளி மக்களின் உணவாகப் பயன்படும் மாடுகளை அறுப்பதற்கு எதிராக உணர்ச்சிக் குரல் எழுப்பும் சங்பரிவார், தேசீய நாட்களையும் தேசீயக் கொடியையும் சுயலாபத்துக்காகப் பயன்படுத்துவது தன் அரசியல் வாழ்விற்காகவும் வெடிகுண்டு வழக்குகளில் சிக்கியிருக்கும் சங்பரிவார் முகத்தைக் காப்பதற்காகவுமே என்பது இந்திய மக்களுக்குத் தெரியாதா?
சங்பரிவார் தலைவர்கள் திரைமறைவில் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதல்கள் தற்போது வழக்கு-விசாரணைகளில் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்து கொண்டிருப்பதும் அவற்றைக் காஷ்மீரில் கொடியேற்றும் நாடகம்போல் எத்துணை முயன்றாலும் திசைதிருப்பிவிட முடியாது என்பதும் மக்களுக்குப் புரியாதா என்ன?.
– ரஸ்ஸல்.
Filed under: பொதுவானவை | Tagged: சங்பரிவாரும்-தேசீயச்-சின | Leave a comment »