அமெரிக்க இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனம்: வீடியோ காட்சிகள்!

Iraq checkpoint

பத்திரிகையாளர்கள் பேசிக்கொண்டு தெருவில் நடந்து போய்க்கொண்டு இருக்கிறார்கள் சின்னஞ்சிறு உருவங்களாய். அவர்களைக் குறிபார்த்து ஹெலிகாப்டர்கள் மேலே பறக்கின்றன. உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

இயந்திர இரைச்சல்களோடு குண்டுகள் சீறுகின்றன. உயிருக்காக அங்குமிங்கும் ஓடி செத்து விழுகின்றனர் பத்திரிகையாளர்கள். நம் கண்முன்னால் நடப்பதாய் வீடியோ காட்சிகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. கண்ணிமைக்கும் நேரத்தில் மனித உயிர்களை இரத்தச்சகதியில் வீழ்த்திவிட்டு, நகர்கிறார்கள். காட்சிகள் ஒன்றொன்றாய் தொடர்கின்றன. அதிர்ச்சியும், பதற்றமும் நம் நாடி நரம்புகளிலெல்லாம் துடிக்கிறது.

ஈராக் போரில் அப்பாவி பொதுமக்களும், பத்திரிகையாளர்களும் அமெரிக்க இராணுவத்தால் எந்த வறைமுரையுமற்று கொன்று குவிக்கப்பட்டனர் என்று செய்திகள் வந்த் போதெல்லாம் அமெரிக்கா அதனை மறுத்து வந்தது. தந்து நிறுவனத்தின் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ரியுட்டர்ஸ் நிறுவனம் அதற்கான ஆதாரங்களைத் திரட்ட எவ்வளவோ முயற்சித்தது. இப்போது விக்கிலீக்ஸ் அந்தக் கொடூரங்களை வீடியோக் காட்சிகளாக்கி உலகத்தின் பார்வைக்கு வைத்திருக்கிறது.

இந்த அமெரிக்காதான் உலகத்துக்கே ஜனநாயகம் பற்றி பாடம் எடுக்கும். சுதந்திரம் குறித்து பெரிமிதம் கொள்ளும். மனித உரிமைகளுக்குத் தன்னை காவலனாய் முன்னிறுத்தும். ஏகாதிபத்தியத்தின் இரக்கமற்ற யுத்தவெறியும், மனித உயிர்களை ஒரு பொருட்டாக மதிக்காத அதன் குரூர மனநிலையும் இதுதான்.