மனைவி மீது சந்தேகம்: 1 1/2 வயது குழந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்த தந்தை

மனைவி மீது சந்தேகப்பட்டு, 1 1/2 வயது குழந்தையின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த அந்தக் குழந்தையின் தந்தை பின்னர் காவல் துறையிடம் சரண் அடைந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட கம்பி கட்டும் தொழிலாளியான சுந்தரமும் நஞ்சாபுரம் கிராமத்தை சேர்ந்த மஞ்சு என்பவரும் காதலித்தனர். திருமணத்திற்கு முன்பே இருவரும் உல்லாசமாக இருந்ததன் விளைவாக மஞ்சு கர்ப்பமானார். மஞ்சு 7 மாத கர்ப்பிணியாக இருந்த போது ஊர்பெரியவர்கள் பஞ்சாயத்து பேசி இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்தனர்.

இந்நிலையில் திருமணமான சில மாதங்களில் மஞ்சுவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. மஞ்சுவுடன் சுந்தரம் சேர்ந்து வாழாமல் சுற்றி திரிந்தார். 2 நாட்களுக்கு முன் மாமியார் ஊரான நஞ்சாபுரத்திற்கு சுந்தரம் வந்து தான் திருந்தி விட்டதாகவும், மனைவி குழந்தைகளுடன் வாழ விருப்பப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதை நம்பிய மஞ்சுவின் குடும்பத்தார் அவரை வீட்டில் சேர்த்தனர். அப்போது மனைவி மஞ்சுவிடம் இங்கு வாழ பிடிக்கவில்லை. எனவே இருவரும் வெளிïர் சென்று பிழைத்துக் கொள்ளலாம் என கூறினார். மஞ்சு இதற்கு சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் மனைவி மேல் ஏற்பட்ட சந்தேகம் கொலை வெறியாக மாறியது. இதனால் தனக்குப் பிறந்த ஆண் குழந்தையை கொல்ல சுந்தரம் முடிவு செய்தார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது சுந்தரம் தனது 1 1/2 வயது ஆண் குழந்தையான சந்தோஷ்குமாரை வெளியே தூக்கிச்சென்றார். தூக்கத்தில் மஞ்சு விழித்து பார்த்த போது குழந்தையையும், கணவரையும் காணாமல் அதிர்ச்சி அடைந்தார். உடனே சந்தேகம் அடைந்த மஞ்சு மற்றும் அவளது பெற்றோர் வெளியே சென்று தேடிப்பார்த்தனர்.

சற்று தூரத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் குழந்தை சந்தோஷ்குமார் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தான். சுந்தரம் குழந்தையை கொடூரமாக கழுத்தை அறுத்து கொன்று விட்டு தலைமறைவாகி விட்டது அறிந்து மஞ்சு அதிர்ச்சியடைந்தார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் காவல்துறைியனர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாகி விட்ட சுந்தரத்தை வலைவீசி தேடினார்கள். இந்நிலையில் சுந்தரம் புதன் கிழமையன்று மாரண்டப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் மாணிக்கம் முன்னிலையில் காவல்துறையிடம் சரணடைந்தார்.

inneram.com