தனது பிடதி ஆசிரமத்தில் ஆணுறைகள், மதுவுடன்தான் இருப்பார் நித்தியானந்தா-சாட்சியின் வாக்குமூலம்

பெங்களூர்: சாமியார் நித்தியானந்தா தனது பிடதி ஆசிரமத்தில் எப்போதும் ஆணுறைகள், மது வகைகளை வைத்திருப்பார். ஆணுறைகளை அவர் வைத்திருந்ததை நானே எனது கண்ணால் பார்த்துள்ளேன் என்று நித்தியானந்தா வழக்கில் ஒரு சாட்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

சமீபத்தில் நித்தியானந்தா வழக்கில் ராம்நகர் கோர்ட்டில் கர்நாடக சிஐடி போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அந்த குற்றப்பத்திரிக்கையுடன் இந்த வாக்குமூலத்தையும் இணைத்துள்ளனர்.

பல்வேறு சாட்சிகளின் வாக்குமூலங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. அதில் ஒரு பெண் சாட்சிதான் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இவரிடம், மோட்சம் அடைவீர்கள் என்று சொல்லி சாமியார் நித்தியானந்தா உடல் ரீதியான உறவுக்கு கட்டாயப்படுத்தி ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அந்தப் பெண் கூறுகையில், நான் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பிடதி ஆசிரமத்தில் தங்கியிருந்தேன். அப்போது என்னிடம் ஒரு மதுக் கடையிலிருந்து மது வாங்கி வருமாறு கேட்டுக் கொண்டார் நித்தியானந்தா.

இதைக் கேட்டதும் நான் அதிர்ச்சியும், வியப்பும் அடைந்தேன். இருப்பினும் நித்தியானந்தாவின் போதனைகளால் எனது மனம் அந்த அதிர்ச்சியை புறக்கணித்தது. எந்த ஒரு குடும்பப் பெண்ணும் மதுக் கடைக்குச் சென்று மது வாங்க மாட்டார். ஆனால் நித்தியானந்தாவின் போதனையால் பிரெய்ன் வாஷ் செய்யப்பட்டிருந்த நான் ஆசிரமத்திற்கு அருகில் இருந்த மதுக் கடைக்குச் சென்று மது வாங்கி வந்தேன்.

பின்னர் அதை தனது அறைக்குக் கொண்டு வருமாறு கூறினார் நித்தியானந்தா. அங்கு கொண்டு போய்க் கொடுத்ததும் அதை வாங்கி அருந்தினார். என்னால் அந்த மதுவின் நெடியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் நான் வாந்தி எடுத்து விட்டேன். பின்னர் நான் மயங்கி விட்டேன்.

சில மணிநேரம் கழித்து நித்தியானந்தா எழுப்பிய பிறகே நான் கண் விழித்தேன். நான் மயக்கமாக இருந்தபோது என்ன நடந்தது என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. நான் படுக்கையில் படுத்திருந்தேன். என்னை அவர் என்ன செய்தார் என்பது தெரியவில்லை. ஆனால் எனது உடைகள் கலைந்திருந்தன.

பிறகு என்னை டிரஸ் செய்து கொள்ளச் சொல்லி அங்கிருந்து போகுமாறு பணித்தார் நித்தியானந்தா. நான் ஆசிரமத்தில் சேர்ந்தபோது நித்தியானந்தா போட்ட விதிமுறைகளில் ஒன்றாக எனக்குக் கூறப்பட்டவை ஆசிரமத்திற்குள் மது அருந்தக் கூடாது என்பது. ஆனால் என்னையே மது வாங்கச் சொல்லி அனுப்பி வைத்தவர் நித்தியானந்தா.

அதேசமயம், நான் அவருக்கு மது வாங்கி வந்ததையும், அவர் அருந்தியதையும் யாரிடமும் கூறக் கூடாது என்று என்னை எச்சரித்தார் நித்தியானந்தா என்று அந்த பெண் கூறியுள்ளார்.

மது மட்டுமல்லாமல் ஆணுறைகளும் நித்தியானந்தா அறையில் இருந்ததாகவும் அப்பெண் கூறியுள்ளார். இவை இரண்டும் நித்தியானந்தா அறையில் எப்போதும் இருக்கும் என்றும் அப்பெண் கூறியுள்ளதாக அந்த வாக்குமூலம் தெரிவிக்கிறது.

thatstamil