30 மாதத்தில் 3,222 பெண்கள் பலி தற்கொலையால் 2,182 பேர் சாவு

Suicide hanging

தமிழகத்தில் கடந்த 30மாதங்களில் 3ஆயிரத்து 222பெண்கள் இறந்துள்ளனர். தற்கொலை மூலம் 2ஆயிரத்து 182 பேரும், வரதட்சணை கொடுமை யால் 197பேரும் பலியாகி உள்ளனர்.

இளம்பெண்கள் மரணம் குறித்து மதுரையை சேர்ந்த எவிடன்ஸ் அமைப்பு 25மாவட்டங்களில் ஆய்வு நடத்தியது. கடந்த 2008 ஜனவரி முதல் இவ்வாண்டு ஜூன் வரை தமிழகத்தில் 3ஆயிரத்து 222 இளம் பெண்கள் இறந்தது தெரியவந்துள்ளது. அதில் 68சதவீத பெண்கள், அதாவது 2ஆயிரத்து 182 பெண்கள் தற்கொலை மூலம் உயிரை மாய்த்துள்ளனர்.

பெண்கள் சாவு பட்டியலில் வேலூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 378 பெண்கள் இறந்துள்ளனர். விழுப்புரத்தில் 242, மூன்றாவது நெல்லையில் 219, காஞ்சிபுரத்தில் 194, கடலூரில் 184 பெண்கள் இறந்துள்ளனர். மொத்த மரணத்தில் 737 பேரும், தற்கொலை செய்து கொண்டவர்களில் 500 பேரும் ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்தவர்கள்.

தற்கொலையில் வேலூர் (241 பேர்), நெல்லை (180), தூத்துக்குடி (136), கடலூர் (128), விழுப்புரம் (122) மாவட்டங்கள் முறையே முதல் 5இடங்களில் உள்ளது. விபத்தில் 621, வரதட்சணை கொடுமை யால் 197 பெண்கள் இறந்துள்ளனர்.

இந்த மரணத்திலும் வேலூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. சந்தேகம் மற்றும் கொலையால் 179 பெண்களும் இறந்துள்ளனர்.

இறந்தவர்களில் 931 பேர் 18 வயதிற்கு உட்பட்டவர்கள், 2ஆயிரத்து 291 பெண்கள் 19முதல் 25வயதிற்கு உட்பட்டவர்கள்.எவிடன்ஸ் செயல் இயக்குனர் கதிர் கூறுகை யில், ‘பெண்கள் மீதான வன்முறைகளை விசாரிக்க பெண் டிஎஸ்பிக்களை நியமிக்க வேண்டும்.

வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் மனநல ஆலோசனைகள் வழங்கவும், வழக்கை அச்சமின்றி எதிர்கொள்ள சாட்சிகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மறுவாழ்வு இல்லங்களை அமைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.