முஸ்லிம்களுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தல்

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை மூன்றரை சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று சங்கரன்கோவிலில் நேற்று நடந்த தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்கரன்கோவில் காந்திநகர் சமுதாயக் கூடத்தில் நேற்று  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில மேலாண்மைக்குழு தலைவர் சம்சுல்லுஹா ரஹ்மானி தலைமை வகித்தார். மாநில மேலாண்மை குழு உறுப்பினர் ஸைபுல்லா ஹாஜா மேற்பார்வையாளராக கலந்து கொண்டார். மாவட்டத் தலைவர் யூசுப் அலி, செயலாளர் செய்யது அலி, பொருளாளர் சாகுல், துணை தலைவர் ஜபருல்லா  முன்னிலை வகித்தனர். சங்கரன்கோவில் நகர தலைவர் அப்துல் ஹக்கீம், நகர செயலாளர் காஜாமைதீன், பொருளாளர் அபுபக்கர் ஆகியோர் உட்பட மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பாபர் மசூதி தொடர்பாக கடந்த செப்டம்பர் 30ம் தேதி அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இந்தியாவின் மதச்சார்பின்மை கொள்கைக்கு முரணானது என்றும், வரும் ஜனவரி 4ம் தேதி மதுரையில் நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமிய மக்கள் கலந்து கொள்வது என்றும், கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் மிகவும் பின்தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரையின்படி இந்திய அளவில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும், தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள மூன்றரை சதவீதம் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், தென்காசியை தலைநகராக கொண்டு புதிய மாவட்டமும், கடையநல்லூரை தனி தாலுகாவாகவும் அறிவிக்க வேண்டும்,  சங்கரன்கோவில் கழுகுமலை சாலையில் உள்ள முஸ்லிம் நகராட்சி நடுநிலைப் பள்ளி கட்டிடத்தை சீரமைத்து திறக்க வேண்டும்  என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.