டெல்லி: கடந்த 60 ஆண்டு காலமாக நாட்டு மக்களை அலைக்கழித்து வரும் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகப் போகிறது. இதற்கான தடைகளை உச்சநீதிமன்றம் அகற்றி விட்டது. கடந்த 60 ஆண்டு காலமாக நடந்துவரும் சட்டப் போராட்டம் குறித்த ஒரு பார்வை.60 ஆண்டு கால சட்டப் போராட்டமாக இது இருந்தாலும் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலான மோதலாக இது நிலவி வருகிறது.
முதல் முறையாக 1949ம் ஆண்டு இந்த பிரச்சினை (அதாவது சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் இருந்ததா, அந்த இடம் யாருக்குச் சொந்தம், கோவிலை இடித்து விட்டுத்தான் மசூதி கட்டப்பட்டதா என்பது) கோர்ட்டுக்கு வந்தது. அந்த ஆண்டில், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர், சீதையின் சிலைகள் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு தொடரப்பட்டது.
பாபர் மசூதி இந்த இடத்தில் கிட்டத்தட்ட 400 ஆண்டுளாக இருந்து வருகிறது என்பது ஒரு சாராரின் வாதம். இன்னொரு சாராரோ, அங்கு இருந்த மிகப் பெரிய கோவிலை இடித்து விட்டுத்தான் பாபர் மசூதி கட்டப்பட்டதாக கூறுகின்றனர். இந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார். அதையொட்டிதான் அங்கு கோவில் கட்டப்பட்டிருந்ததாகவும் கூறுகின்றனர் அவர்கள்.
அயோத்திப் பிரச்சினையின் முக்கிய அம்சங்கள்-ஆரம்பத்திலிருந்து….
1528– அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டது.
1853– சர்ச்சைக்குரிய இடத்திற்கு உரிமை கொண்டாடி முதல் முறையாக மிகப் பெரிய மதக் கலவரம் வெடித்தது. பலர் உயிரிழந்தனர்.
1859– ஆங்கிலேய அரசாங்கம் சர்ச்சைக்கு முடிவு கட்டும் வகையில் சர்ச்சைக்குரிய இடத்தைச் சுற்றி வேலி அமைத்தது. மேலும், இந்துக்களும், முஸ்லீம்களும் தனித் தனியாக வழிபாடு நடத்த ஏற்பாடு செய்தது. இதுதான் கடந்த 90 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
1949– டிசம்பர் மாதத்தில் ராமர், சீதையின் சிலைகள் மசூதியில் வைக்கப்பட்டன. இதனால் கலவரம் வெடித்தது. வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து சர்ச்சைக்குரிய இடத்தில் யாரும் நுழையக் கூடாது என்று அரசு தடை விதித்தது. அதை சர்ச்சைக்குரிய பகுதியாகவும் அரசு முதல் முறையாக அறிவித்தது.
1984– ராமர் கோவில் கட்டும் கோரிக்கையும், இயக்கமும் வலுப்பெற்றன. இந்து அமைப்புகள் இணைந்து ஒரு கமிட்டியை அமைத்தன. அத்வானி தலைவராக நியமிக்கப்பட்டார்.
1986- மசூதி அமைந்துள்ள பகுதியை இந்துக்கள் வழிபாடு நடத்த திறந்து விட வேண்டும் என மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.
1986– பாபர் மசூதி நடவடிக்கைக் குழு உருவாக்கப்பட்டது.
1989- சர்ச்சைக்குரிய இடத்திற்கு அருகே ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையை விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் நடத்தின.
1990– அப்போதைய பாஜக தலைவரான அத்வானி நாடு முழுவதும் ரத யாத்திரையை மேற்கொண்டார். இந்த சமயத்தில் விஎச்பி தொண்டர்கள் மசூதிக்குள் புகுந்து அதன் ஒரு பகுதியை சேதப்படுத்தினர். பிரதமராக இருந்த சந்திரசேகர் தலையிட்டு பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர முயற்சித்தார். ஆனால் பலன் இல்லை.
1991– ராமர் கோவில் கட்டும் இயக்கம் என்ற பெயரில் அத்வானி நடத்திய ரத யாத்திரையால் பாஜக அரசியல் ரீதியாக பலமடைந்தது. உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்தது. நாடாளுமன்றத்தில் முதல் முறையாக முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.
– அயோத்தியில் கரசேவகர்கள் குவியத் தொடங்கினர். நாடு முழுவதிலுமிருந்து செங்கற்கள் கொண்டு வரப்பட்டன.
1992– டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதியை இடிததனர் கரசேவகர்கள். நாடு முழுவதும் மதக் கலவரம் வெடித்தது. ஏராளமான அப்பாவி இந்து, முஸ்லீம்கள் உயிரிழந்தனர்.
– டிசம்பர் 16ம் தேதி நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசு ![[^]](https://i0.wp.com/cache2.hover.in/hi_link.gif)
1993– நியமிக்கப்பட்டு 3 மாதங்கள் கழிந்த நிலையில் லிபரான் கமிஷன் தனது விசாரணையைத் தொடங்கியது.
2001– பிப்ரவரி 27ம் தேதி குஜராத்தின் கோத்ராவில் ரயிலுக்கு வைக்கப்பட்ட தீயில் சிக்கி 58 பேர் கொல்லப்பட்டனர். அனைவரும் அயோத்தியிலிருந்து வந்து கொண்டிருந்த இந்து அமைப்பினர் ஆவர். இதையடுத்து குஜராத்தில் பெரும் கலவரம் வெடித்தது. 1000க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.
2002– ஏப்ரல் மாதம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னெள பெஞ்ச்சில் 3 நீதிபதிகளைக் கொண்ட பெஞ்ச், தீர்ப்பு தொடர்பான இறுதி விசாரணையைத் தொடங்கியது.
2003– ராமர் கோவில் சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்ததா என்பதை அறிய தொல்பொருள் ஆய்வுக்கு லக்னோ பெஞ்ச் உத்தரவிட்டது.
– செப்டம்பரில் பாபர் மசூதியை இடித்த செயலுக்குத் துணை போன இந்து மதத் தலைவர்கள், விசாரணைக்கு உட்பட வேண்டும் என லக்னெள பெஞ்ச் உத்தரவிட்டது. இருப்பினும் அத்வானி மீது எந்தப் புகாரும் கூறப்படவில்லை.
2007– அயோத்தி வழக்கில் மறு ஆய்வு மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
2009– லிபரான் கமிஷன் தனது 17 ஆண்டு கால விசாரணையை முடித்து ஜூன் 30ம் தேதி அறிக்கையை சமர்ப்பித்தது. அதன் முழு விவரங்கள் பொதுமக்களுக்கு இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
2010– செப்டம்பர் 24ம் தேதி அயோத்தி வழக்கின் தீர்ப்பு அளிக்கப்படும் என லக்னெள பெஞ்ச் அறிவித்தது.
– செப்டம்பர் 23ம் தேதி அதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
– செப்டம்பர் 28ம் தேதி இந்தத் தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்.
– செப்டம்பர் 30ம் தேதி அலகபாத் உயர் நீதிமன்றத்தி் லக்னெள பெஞ்ச் தனது தீர்ப்பை வெளியிடவுள்ளது.