அறுவைச் சிகிச்சை மூலம் நடைபெறும் பிரசவங்கள் பத்து மடங்கு அதிக ஆபத்தானவை !



அஸ்ஸலாமு அலைக்கும்,,,

கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் மெல்ல மெல்ல நம்மை இயற்கையைப் புறந்தள்ளி, நமது நடைமுறை வாழ்க்கையில் எல்லாமே செயற்கையாகிவிட்ட நிலைமையைத் தோற்றுவித்து வருகிறது.
மனிதனின் அடிப்படை என்பதே தாய்மையிலிருந்துதான் தொடங்குகிறது. தாய், தாய்ப்பாசம், தாய்மை உணர்வு போன்றவை காலங்கள் மாறினாலும், சூழ்நிலைகள் மாறினாலும் மாறாதவை என்கிற உண்மையை யாரும் மறுக்க இயலாது. தாய்மையேகூட கொச்சைப்படுத்தப்படுவதும், தேவையற்ற பாரம் என்று கருதப்படுவதும், தாய்மைப் பேறு என்பதை செயற்கையாக்க முயல்வதும் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது.
சமீபகாலமாக நடைபெற்றுவரும் உலக சுகாதார நிறுவனத்தில் ஆய்வுகள், ஒருபுறம் மகப்பேறு முறையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கும் நிலையில், ஒரு விபரீதமான போக்கையும் எடுத்துக்காட்டுகின்றன. கடந்த 20 ஆண்டுகளாக நகர்ப்புறங்களில், அதிலும் குறிப்பாக, படித்த, பட்டணத்து மகளிர் மத்தியில், அறுவைச் சிகிச்சை மூலம் பிரசவம் பார்ப்பது அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டுகின்றன அந்த ஆய்வுகள். இதுபோன்ற அறுவைச் சிகிச்சை முறைகளும், ஆயுத உதவியுடன் பிரசவம் பார்க்கும் உத்திகளும் தாய்க்கும் சேய்க்கும் அதிகமான ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடியவை என்கிறது உலக சுகாதார நிறுவன அறிக்கை ஒன்று.
லான்செட் என்கிற மருத்துவ இதழில் இந்தியாவில் நடைபெறும் மகப்பேறு பற்றிய ஆய்வுக் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி, இப்போது இந்தியாவில் நடைபெறும் பிரசவங்களில் ஐந்தில் ஒன்று அறுவைச் சிகிச்சை அல்லது ஆயுத உதவியுடன் நடத்தப்படுவதாகக் குறிப்பிடும் அந்தக் கட்டுரை, இது தாய்க்குப் பல பின்விளைவுகளை ஏற்படுத்துவதுடன் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கும் ஊறு விளைவிக்கும் தன்மையன என்று குறிப்பிடுகிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி, ஆண்டுக்கு சராசரியாக 15 விழுக்காடு பிரசவங்கள் அறுவைச் சிகிச்சை முறையில் நடைபெறுவது தவிர்க்க முடியாது என்றாலும், இந்திய சராசரி அதைவிட 3 விழுக்காடு அதிகமாக 18 சதவிகிதம் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது அந்தக் கட்டுரை. மேலும், இந்த 18 விழுக்காடு அறுவைச் சிகிச்சை முறையிலான பிரசவங்களில் ஏறத்தாழ 80 சதவிகிதம் நகர்ப்புறங்களில் நடைபெறுகின்றன என்பதுதான் அதிர்ச்சி அளிக்கும் தகவல். நமக்கு மிகவும் கவலையளிக்கும் நடைமுறை தனியார் மருத்துவமனைகளின் செயல்பாடுகள். முடிந்தவரை இயற்கையாகப் பிரசவம் பார்ப்பது என்கிற கடமை உணர்வு முற்றிலுமாக மாறி, தனியார் மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களில் முன்பு 5 சதவிகிதமாக இருந்தது இப்போது 75 சதவிகிதம் வரை அறுவைச் சிகிச்சை மூலம், எந்தவித மருத்துவக் கட்டாயம் இல்லாமலேயே நடத்தப்படுவதாக உலக சுகாதார நிறுவன ஆய்வு இந்திய நிலைமையைச் சுட்டிக்காட்டுகிறது. மருத்துவமனைக்கு லாபம் சேர்க்கும் ஒரே குறிக்கோளுடன் மருத்துவர்கள் தாய்மார்களிடம் இதுபோன்ற அறுவைச் சிகிச்சை முறைக்குப் பரிந்துரைப்பதாக அந்த ஆய்வுகுறிப்பிட்டிருக்கிறது.
வேதனையில்லாமல் பிரசவம் செய்து கொள்ள வேண்டும் என்று தாய்மார்கள் கருதத் தொடங்கியிருப்பதும் இந்த நிலைமைக்கு ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அறுவைச் சிகிச்சை அல்லது ஆயுத உதவியுடன் மகப்பேறு என்பது ஆபத்துகளை உள்ளடக்கியது என்று தாய்மார்களிடம் மருத்துவர்களோ, அவர்களது பெற்றோர்களோ, சமூக ஆர்வலர்களோ சொல்லிக் கொடுப்பதில்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய ஒன்று. இயற்கையான பிரசவத்தைவிட, இதுபோல அறுவைச் சிகிச்சை மூலம் நடைபெறும் பிரசவங்கள் பத்து மடங்கு அதிக ஆபத்தானவை என்பது தாய்மார்களுக்குத் தெரிவதில்லை.
மேலைநாடுகளில் கடந்த இருபது ஆண்டுகளாக இயற்கையான பிரசவத்தை வலியுறுத்தி இயக்கங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த பத்து ஆண்டுகளாக அறுவைச் சிகிச்சை முறை மற்றும் ஆயுத உதவியின்றி மட்டுமே பிரசவம் அமைய வேண்டும் என்றும் அப்போதுதான் தங்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையில் உள்ள பாசம் நிரந்தரமாக இருக்கும் என்றும் பல தாய்மார்கள் மேலைநாடுகளில் வலியுறுத்துகின்றனர். பிரசவ வலியைப் பெண்மையின் தனித்துவம் என்று விளம்பரப்படுத்துகிறார்கள். மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சையைப் பரிந்துரைத்தால் கேள்வி கேட்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நிலைமை நமது நாட்டிலும் ஏற்பட வேண்டிய கட்டாயம் உருவாகி இருக்கிறது.
தேவையற்ற அறுவைச் சிகிச்சை மற்றும் ஆயுத உதவியுடன் சிகிச்சை போன்றவை தேசிய அளவில் நமது நிதியாதாரத்தையும், தீவிர மருத்துவ சிகிச்சைக்கான பல நோயாளிகளின் உடனடித் தேவைகளையும்கூடப் பாதிக்கின்றன. கிராமப்புறங்களிலும் இதே நிலை ஏற்படுமானால், மகப்பேறுக்கான நிதி ஒதுக்கீடு தேவையில்லாமல் அதிகரிக்கக் கூடும். தேவையற்ற அறுவைச் சிகிச்சைகள், மருத்துவர்களின் தலையீடு உண்மையாகவே தேவைப்படும் தாய்மார்களுக்கு சிகிச்சை கிடைக்காத நிலைமையைக்கூட ஏற்படுத்த வாய்ப்புண்டு.
மருத்துவர்களும், பெற்றோர்களும், தாய்மார்களும், இயற்கைக்கு முன்னுரிமை கொடுத்து முடியும்வரை மகப்பேறு என்பது ஆரோக்கியமான நன்மக்கள் பேறாக இருக்க உறுதிபூண வேண்டும். அதுதான் தாய்சேய் நலத்துக்கு உத்தரவாதம் அளிக்கும். லாப நோக்கில் செயல்படும் மருத்துவர்களும், சுலபமாகப் பிரசவித்துவிட வேண்டும் என்று நினைக்கும் தாய்மார்களும் ஆரோக்கியமாக வளர வேண்டிய குழந்தையின் எதிரிகள்…
அழுதாலும் பிள்ளை அவள்தானே பெற வேண்டும் என்று கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு. இடுப்பு நோகாமல் பிரசவம் என்பது இயற்கைக்கு எதிரல்லவா?

kadayanalluraqsha

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: