நிர்வாண படம் எடுத்து மிரட்டுவதாக புதுமணப்பெண் புகார்!

திருமணமாகி எட்டு மாதங்களே ஆன புதுமணப்பெண், கணவன் தன்னை நிர்வாணப்படம் எடுத்து மிரட்டுவதாக மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது அப்பகுதியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேரூர் அருகேயுள்ள பச்சாபாளையம் கோவை கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பக்தவச்சலம்.  அவருடைய மகள் சவுந்தர்ய பிரியாவுக்கும், புதுச்சேரியை சேர்ந்த ஐசக் கோபிநாத் என்பவருக்கும் கடந்த 8 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த 8 மாதத்தில், கணவன் வீட்டிலிருந்து தனியாக தாய் வீடு திரும்பிய சவுந்தர்யபிரியா பேரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தன் கணவன் மீது ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.

அதில், “எனக்கும், புதுச்சேரியை சேர்ந்த ஐசக் கோபிநாத்துக்கும் கடந்த 8 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது வரதட்சணையாக 25 பவுன் நகை, 1 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் தரப்பட்டது. மேலும் ஐசக் கோபிநாத்துக்கு ஒரு மோட்டார் சைக்கிளும் வாங்கி கொடுத்தோம். 2 லட்சத்துக்கான காசோலையையும் எனது தந்தை வழங்கினார்.

திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே “மீண்டும் 10 லட்சம் வாங்கி வா” என்று எனது கணவர் என்னை சித்ரவதை செய்யத் தொடங்கினார். மேலும் என்னை நிர்வாணமாக படம் எடுத்து வைத்துக் கொண்டு இண்டர்நெட்டில் போட்டு விடுவேன் என்றும் மிரட்டுகிறார். அவரது சித்ரவதை தாங்க முடியாமல் பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டேன்.

எனது பெரிய மாமியார் குடும்பத்திலுள்ள மேலும் 3 பேரும் அவருக்கு உடந்தையாக உள்ளனர். வரதட்சணை கேட்டும் நிர்வாண படம் எடுத்தும் என்னை மிரட்டும் எனது கணவர் மற்றும் அவரது உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்” என்று கோரியுள்ளார்.

உலகம் முன்னேறுவதற்கு ஏற்ப, வரதட்சணை கொடுமை புரிபவர்களும் புதுப் புது விதமாக வரதட்சணை கேட்டு மிரட்டத் தொடங்கியுள்ளனர். இணையத்தில் நிர்வாண படத்தைப் போடுவதாக மிரட்டுவது புதிய ட்ரெண்ட். அதனை வரதட்சணைக்கும் பயன்படுத்த துவங்கியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத.

inneram.com