காஸா உதவிக் கப்பல்கள் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்- 15 துருக்கியர்கள் பலி

ஜெருசலேம்: காஸாவுக்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற துருக்கி நாட்டு உதவிக் கப்பல்கள் மீது இஸ்ரேலிய கமாண்டோப் படையினர் நடத்திய வெறித் தாக்குதலில் 15 பேர் பலியாயினர்.

இஸ்ரேலின் இந்த செயலுக்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பல்வேறு உலக நாடுகளும் இஸ்ரேலின் செயலைக் கண்டித்துள்ளன.

பாலஸ்தீனத்தில் உள்ள காஸா பகுதிக்கு துருக்கியை சேர்ந்த 6 கப்பல்களில் உதவி பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்றனர். அந்த கப்பல்களில் சுமார் 600 பேர் பயணம் செய்தனர்.

இதை அறிந்த இஸ்ரேலின் கப்பற்படை கமாண்டோ பிரிவினர் அக்கப்பல்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியால் சுட்டுக் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 15 பேர் பரிதாபமாக இறந்தனர்.

தூதரை திரும்பப் பெற்ற துருக்கி

இஸ்ரேலின் இந்த அடாவடி செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. துருக்கி நாட்டு அரசு இஸ்ரேலின் தாக்குதலை கடுமையாக கண்டித்ததோடு, இஸ்ரேலுக்கான தனது தூதரை உடனடியாக திரும்பப் பெற்றுக்கொண்டது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

இஸ்ரேலின் அடாவடித் தாக்குதலுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்தது.

இதுகுறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகளும் தனித் தனியாக வெளியிட்ட அறிக்கைகளில், இஸ்ரேலின் தாக்குதல் மிகவும் கண்டனத்துக்குரியது. காஸா பகுதியை முற்றுகையிட்டு, யாரும் அங்கு போகாமல் தடுத்து வரும் செயலை உடனடியாக இஸ்ரேல் நிறுத்திக்கொள்ள வேண்டும். காஸா பகுதியை விட்டு அது விலக வேண்டும்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 1860வது தீர்மானத்தை இஸ்ரேல் மதிக்க முன்வர வேண்டும். காஸா பகுதியை இஸ்ரேல் மூடிவைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது, பாதக விளைவுகளையே ஏற்படுத்தக் கூடியது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகியவை வலியுறுத்தியுள்ளன.

இந்தியா கண்டனம்

இந்தியாவும், இஸ்ரேலின் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுஅமைச்சகம் வெளியிட்ட செய்தியில், இந்த சம்பவம் மிகவும் வேதனை தருகிறது. அப்பாவிகளின் உயிர்கள் பறிபோயிருப்பது பெரும் வருத்தத்தைத் தருவதாக உள்ளது. காஸா முற்றுகையை இஸ்ரேல் கைவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மழுப்பல் அறிக்கை

இஸ்ரேல் என்ன செய்தாலும் அதை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கும் அமெரிக்கா காஸா சம்பவம் குறித்து மழுப்பலான, சொதப்பலான கருத்தைத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கான அமெரிக்க துணை நிரந்தரப் பிரதிநிதி அலெஜான்ட்ரோ உல்ப் கூறுகையில், சமீபத்திய வன்முறை அமெரிக்காவை கவலைக்குள்ளாக்கியுள்ளது. அப்பாவிகளின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதும், காயம் ஏற்படுத்தப்பட்டிருப்பதும் வருத்தத்திற்குரியது.

நடந்த விவரத்தை முழுமையாக அறிய முயன்று வருகிறோம். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். இஸ்ரேல் அரசு நடந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில் நேரடியாக உதவிகளை அனுப்புவது பொருத்தமற்றது என்பதை அனைவரும் உணர வேண்டும். காஸா பகுதிக்குப் போக வேண்டிய பொருட்களை வகைப்படுத்தி அதை எளிமையாக்க இஸ்ரேல் முயல வேண்டும் என்றார்.

இதற்கிடையே, ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் டேணியல் கார்மன் கூறுகையில், தாக்குதலுக்குள்ளான கப்பல் நிச்சயம் உதவிக் கப்பலாகத் தெரியவில்லை. அந்த நோக்கத்துடன் அது போனதாகவும் தெரியவில்லை.

மனிதாபிமான உதவிக்காக சென்றதாக அவை கூறப்பட்டாலும் கூட அப்படி நாங்கள் நினைக்கவில்லை. ஐ.நா. சபை, செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றைத் தாண்டி எப்படி மனிதாபிமான சேவையை செய்ய முடியும்?.

மேலும் இஸ்ரேல் கமாண்டோப் படையினரை கத்திகள், கோடாலிகள் உள்ளிட்டவற்றால் அந்தக் கப்பலில் இருந்தோர் தாக்கினர். இவர்களை எப்படி மனிதாபிமான உதவிகளைச் செய்ய வந்தோர் என்று கருத முடியும்? என்றார்.

thatstamil