டயர் வெடித்தது ஸ்பைஸ் ஜெட் விமானம்

டெல்லி: டெல்லியில் இருந்து இன்று பிற்பகல் ஸ்ரீநகர் புறப்பட்டுச் சென்ற ஸ்பைஸ் ஜெட் பயணிகள் விமானத்தில் டயர் வெடித்தது. இதையடுத்து அந்த விமானம் மீண்டும் டெல்லிக்கு திருப்பி அழைக்கப்பட்டு, தரையிறக்கப்பட்டது.

அகமதாபாத்தில் இருந்து டெல்லி வழியாக இந்த விமானம் ஸ்ரீநகர் சென்றது. டெல்லி விமான நிலையத்திலிருந்து பகல் 2 மணிக்கு விமானம் புறப்பட்டது. போயிங் 737 ரகத்தைச் சேர்ந்த விமானத்தில் 186 பயணிகள் இருந்தனர்.

அந்த விமானம் சென்ற சில நிமிடங்களில், தரையிறங்கிய இன்னொரு விமானத்தின் விமானிகள் ஓடு தளத்தில் டயர் துண்டுகள் சிதறி கிடப்பதைப் பார்த்து உடனடியாக தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அது ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் டயர் துண்டுகளாகத் தான் இருக்க வேண்டும் என்று கருதிய தரைக்கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் உடனே அந்த விமானத்தை டெல்லிக்கு திருப்புமாறு உத்தரவிட்டனர்.

அதற்குள் 15 நிமிடங்கள் ஓடிவிட்டன. இந்த நேரத்துக்குள் அந்த விமானம் 150 கி.மீ. தூரம் வரை பயணித்துவிட்டது. ஆனாலும், அந்த விமானம் உடனடியாக டெல்லிக்கு திருப்பப்பட்டது.

அனைத்து பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த விமானம் டெல்லிக்கு திரும்பி வந்தது.

விமானத்தை குறைந்த உயரத்தில் பறக்க வைத்து தொலைநோக்கிகள் மூலம் பார்த்தபோது அதன் வலது பக்க டயர்களில் ஒன்று வெடித்துள்ளது உறுதியானது.

இதையடுத்து விமானத்தை அதற்கேற்றார் போல தரையிறங்குமாறு (smooth sail landing) விமானிகளுக்கு உத்தரவிட்டனர்.

பின்னர் டயர் மாற்றப்பட்ட அந்த விமானம் ஸ்ரீநகருக்கு புறப்பட்டுச் சென்றது.

-nesan-

விமான விபத்தில் பலியான 8 பேரிடம் போலி பாஸ்போர்ட்?

திருவனந்தபுரம்: மங்களூர் விமான விபத்தில் பலியானவர்களில் 8 பேர் போலி பாஸ்போர்ட்டில் வந்திருக்கலாம் என்று தெரிகிறது. இதனால் அவர்களின் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மங்களூர் விமான விபத்தில் பலியான 158 பேரில் 22 பேரின் உடல்கள் அடையாளம் காணமுடியாத அளவுக்கு கருகி விட்டன. அவர்களை அடையாளம் காண டிஎன்ஏ சோதனைகள் ஒருபுறம் நடக்கின்றன. அத்தோடு பயணிகள் பட்டியலையும், பாஸ்போர்ட்டில் உள்ள பெயர் விபரங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் பணியும் நடந்து வருகிறது.

இது தொடர்பாக கேரளாவின் கோழிக்கோடு, மலப்புரத்தில் உள்ள பஸ்போ்ர்ட் அலுவலக்களின் உதவியை அதிகாரிகள் நாடியுள்ளனர். அதில திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் பலியான எட்டு பேருக்கு தங்கள் அலுவலகத்தில் இருந்து பாஸ்போர்ட் வழங்கவில்லை என்று கோழிக்கோடு, மலப்புரம் பாஸ்போர்ட் அலுவலகங்கள் தெரிவித்துள்ளன.

எனவே இவர்கள் போலி பாஸ்போர்ட்டில் வந்திருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வளைகுடா நாடுகளில் வேலைக்கு செல்பவர்கள் தங்களுடைய பாஸ்போர்டுகளை தங்கள் வேலை செய்யும் நிறுவனங்களிடம் ஒப்படைத்து விடவேண்டும். நாடு திரும்பும்போது மட்டும் அதை பெற்று கொள்ள முடியும்.

ஆனால் பல நிறுவனங்கள் அதைத் திருப்பித் தராமல் இழுத்தடிப்பதுண்டு. இதனால் இவர்களைப் போன்றவர்களுக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுப்பதற்காகவே வளைகுடா நாடுகளில் பல மோசடி கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன.

நிறுவனங்களிடம் இருந்து பாஸ்போர்ட் முடியாதவர்கள் எப்படியாவது நாடு திரும்ப வேண்டும், என்பதற்காக பணம் கொடுத்து போலி பாஸ்போர்ட் பயணம் செய்கின்றனர். இப்படிதான் விபத்தில் சிக்கிய மங்களூர் விமானத்தில் பயணம் செய்தவர்களில் 8 பேர் போலி பாஸ்போர்ட்டில் வந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்நேரம்.காம்