உங்களில் ஒருவன் நான்

Masjid Haram

பந்தா பண்ணுவதற்கு நமக்கு யாரும் சொல்லித் தரவே தேவையில்லை. நாலு ஆதரவாளர்கள் நமக்குப் பின்னால் வ ருவதற்குக் கிடைத்தால் போதும்; உடனே பெருமையால் தலை கனத்து விடுகிறது; பின்வரும் கூட்டத்தின் ‘வாழ்க’  முழக்கத்தில் கிறக்கம் ஏற்பட்டுவிடுகிறது. உடனே சவடால் பேச்சும் வாயிலிருந்து மடை திறந்த வெள்ளமாகப்  பொழிகிறது.
ஆனால் இந்த அகிலத்திற்கே அருட்கொடையாக இறைத்தூதராக வந்த அண்ணலாரின் வாழ்வில் காணப்படும்  எளிமை நம்மை வியக்க வைக்கிறது.
ஒரு முறை அண்ணல் நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் நீண்ட பயணத்தில் இருந்தார்கள். கண்ணுக்கு எட்டிய  தொலைவுவரை ஒரே மணற்காடு. கடும் வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. மருந்துக்குக்கூட நிழல் இல்லை. பயணத்தின் ஊடாக திடீரென அடர்த்தியான பேரீச்சை மரங்கள் கொண்ட பாலைவனச் சோலை ஒன்று கண்ணில்  பட்டது. அந்தச் சோலையைக் கண்டதும் எல்லாருடைய மனங்களிலும் மகிழ்ச்சி. அங்கு தங்கி உணவருந்தி ஓய்வெடுத்துவிட்டுப்  பயணத்தைத் தொடரலாம் என்று அண்ணலார் முடிவு செய்தார். அடுத்த கணமே நபித்தோழர்கள் சுறு சுறுப்பாகச் செயல்படத் தொடங்கிவிட்டார்கள். சிலர் அந்த இடத்தைத் தூய்மைப்படுத்தினார்கள்; சிலர் உணவு  சமைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்கள்; சிலர் ரொட்டிக்காக மாவு பிசையத் தொடங்கினார்கள்; சிலர் தண்ணீர்  எடுத்து வந்தார்கள்; சிலர் தாம் ஏறிவந்த ஒட்டகங்கள் அனைத்துக்கும் தீவனமும் நீரும் புகட்டினார்கள். அண்ணல் நபிகளார் தம்முடைய பங்கிற்கு விறகு சேகரித்து வரக் கிளம்பினார். நபித்தோழர்கள் அனைவரும் பாசமும்  அன்பும் மேலிட அண்ணலாரைத் தடுத்தார்கள். ‘‘வேண்டாம், இறைத்தூதர் அவர்களே! நீங்கள் ஓய்வெடுங்கள். எல் லா வேலைகளையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம்.’’ அண்ணலார் கூறினார்கள்: ‘‘எல்லா வேலைகளையும் நீங்கள் சிறப்பாகச் செய்வீர்கள் என்று எனக்குத் தெரியும்.  ஆனால் உங்களில் இருந்து மாறுபட்டவனாக இருக்க நான் விரும்பவில்லை. தமது தோழர்களிலிருந்து விலகி இரு ப்பவனை இறைவன் நேசிப்பதில்லை.’’  இந்த எளிமையும் பணிவும் நம் வாழ்விலும் இருந்துவிட்டால் எத்தனை நன்றாக இருக்கும்!

-இறை நேசன்-