இந்தியாவில் இருக்கும் சிறைச்சாலைகளில் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு வலுத்து வருகிறது.
போதைப் பொருள் புழக்கம், பாலியல் சீரழிவு, அதிரடித் தாக்குதல்கள், உரிமைகளைக் கேட்பவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள், சலுகைகளுக்காக நடைபெறும் லஞ்ச ஊழல்கள் என்று முடை நாற்றமடிக்கும் இடங்களாக இந்தியச் சிறைகள் திகழ்கின்றன.
பெண்கள் சிறைச்சாலைகள் மிக மோசமான பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகுவதாக மனித உரிமை அமைப்புகள் கவலைப்படுகின்றன.
இதில் வேதனைக்குரிய முக்கிய விஷயம் நீண்ட காலமாக விசாரணைக் கைதிகளாக வாடுபவர்கள் பற்றியதாகும். குணங்குடி ஹனீபா, உள்ளிட்ட முஸ்லிம் விசாரணைக் கைதிகள் குறித்து த.மு.மு.க. மே&5, 2010&ல் நீதிமன்றம் நோக்கி கவனஈர்ப்புக் கண்டன பேரணி நடத்தப்பட்டிருக்கிறது.
நளினி போன்ற ஆயுள் தண்டனைக் கைதிகள் குறித்து தமிழின உணர்வாளர்கள் கருத்தியல் போரை நடத்துகிறார்கள். பல ஆண்டுகளாக பெருங்கவிஞர் பெருஞ்சித்தரனாரின் மகன் பொழிலன் போன்ற தமிழ்தேசிய உணர்வாளர்களும் நீண்ட நாள் கைதியாக வாடுகிறார்கள்.
பிரபலங்கள், அரசியல் புள்ளிகள் குறித்த விவகாரங்கள் ஏதாவது ஒரு வகையில் கவனப்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த வாய்ப்புகளும், பின்புலங்களும் இல்லாத ஆயிரக்கணக்காண விசாரணைக் கைதிகளும், ஆயுள் தண்டனைக் கைதிகளும் எதிர்காலம் பற்றிய கவலைகளோடு சிறையிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
பலர் பொருளாதார வசதிகளில்லாததால் வழக்குகளைக் கூட நடத்த முடியாமல் சிறைகளில் வாடுகிறார்கள். பலர் வெளியில் உள்ள குடும்பத்தினர் கைவிட்டதால், விரக்தியில் தங்கள் விடுதலை அதன் போக்கில் நிகழட்டும் என மனதை பழக்கப்படுத்திவிட்டார்கள்.
இன்றும் பல முதிய வயது கைதிகள் விடுதலை பெற்று வெளியே சென்றாலும், ஆதரிப்பதற்கோ, மறுவாழ்வு அளிப்பதற்கோ யாரும் இல்லாததால், சிறைதான் நமது வாழ்க்கை என்று தாங்களாகவே தீர்ப்பு எழுதிக் கொண்டு விட்டார்கள்.
தீவிரவாதத்தின் பெயரால் போலித்தனமாக குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம்கள், பிரிவினைவாத முத்திரையுடன் மண்ணுரிமை போராட்டம் நடத்தியவர்கள், நக்ஸல் பாரி சிந்தனையாளர்கள், மக்கள் உரிமை போராட்டக்காரர்கள் என ஒரு பெரும் கூட்டம் மனித உரிமைகள் மறுக்கப்பட்டு, விசாரணைகள் வேண்டுமென்றே இழுத்தடிக்கப்பட்டு சிறைகளில் தவிக்கிறார்கள்.
இவர்களது நிலை குறித்த விவரங்கள் நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கையாகத் தாக்கல் செய்யப்பட வேண்டும்.நாடாளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்களைக் கொண்ட கூட்டு நடவடிக்கைக் குழுவின் மேற்பார்வையில் “உண்மை அறியும் குழு” மாநில வாரியாக அமைக்கப்பட வேண்டும்.
இக்குழு அந்தந்த மாநிலங்களில் உள்ள சிறைச்சாலைகளில் நேரடி கள ஆய்வு செய்து திரட்டும் அறிக்கையை நாடாளுமன்றம் ஏற்று அதையே வெள்ளை அறிக்கையாக வெளியிட்டு விவாதிக்கப்பட வேண்டும். இதில் நடைமுறை சட்ட சிக்கல்கள் இருந்தால் அவை நீதிமன்ற வழிகாட்டலின்படி சரிசெய்யப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்.
அதன் பேரில் விசாரணைக் கைதிகள் விரைந்து தீர்ப்பைப் பெறவும், நீண்டகால ஆயுள் தண்டணைக் கைதிகள் முன் விடுதலைப் பெறவும், வழக்காட முடியாத கைதிகள் நீதி பெறவும், வயதான கைதிகள் விடுதலையாகி மறுவாழ்வு பெறவும் வழி காணப்பட வேண்டும்.
tmmk
Filed under: பொதுவானவை | Tagged: விசாரணைக்-கைதிகள்-வெள்ள | Leave a comment »