கேதன்தேசாய் மீது ரூ.2,000 கோடி ஊழல் புகார்

Front page news and headlines today

இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவராக கேதன் தேசாய் பதவிக்காலத்தில், 40க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 2,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.,)அங்கீகாரம் வழங்கி வருகிறது. மருத்துவக் கல்லூரியில் உள்ள அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், மருத்துவமனை வசதிகள், அங்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை, பேராசிரியர்கள் எண்ணிக்கை ஆய்வு நடத்தப்பட்டு எம்.சி.ஐ., அங்கீகாரம் வழங்கப்படுகிறது. எம்.சி.ஐ., தலைவராக இருப்பவர் கேதன் தேசாய். இவர், கடந்த சில ஆண்டுகளாக இந்த பதவியில் இருந்து வருகிறார். தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்க இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் கேதன் தேசாயை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

நாட்டில் தற்போது 300க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 28 ஆயிரத்து 742 இடங்கள் உள்ளன. கேதன் தேசாய் எம்.சி.ஐ.,யின் தலைவராக இருந்த காலகட்டத்தில், 60க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 40க்கும் மேற்பட்டவை தனியார் மருத்துவக் கல்லூரிகள்.கேதன் தேசாய், புது மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்க ஒவ்வொரு கல்லூரிக்கும் 30 கோடி ரூபாய் லஞ்சமாக பெற்றதாக கூறப்படுகிறது. அவர் எம்.சி.ஐ., தலைவராக பதவி வகித்த காலத்தில், 40க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதால், இதன் மூலமாகவே கேதன் தேசாய் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சமாக பெற்றிருக்கக் கூடும் என நம்பப்படுகிறது.மேலும் படிக்க…

அமெரிக்காவில் சர்வதேச முஸ்லிம் தொழிலதிபர்கள் மாநாடு!

வாஷிங்டன்: உலகின் முக்கியமான 55  நாடுகளில் மிகப்பெரிய முஸ்லிம் தொழிலதிபர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் சர்வதேச மாநாட்டை அமெரிக்கா அடுத்த வாரம் நடத்துகிறது. அமெரிக்க வரலாற்றில் முஸ்லிம்களை மட்டும் அழைத்து நடத்தும் முதல் மாநாடு இதுதான்.

நியூயார்க், உலக வர்த்தக மைய இரட்டை கோபுரங்கள் மீது அல் கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பிறகு முஸ்லிம்கள் என்றாலே அமெரிக்காவில் சந்தேகக் கண்ணோடு பார்க்கிறார்கள், படிப்பு, வேலை வாய்ப்பு விஷயத்தில் பாரபட்சமாக நடத்துகிறார்கள் என்று உலகம் முழுவதும் பரவியுள்ள எண்ணத்தைப் போக்கும் விதத்தில் இந்த மாநாட்டை அதிபர் பராக் ஒபாமா ஏற்பாடு செய்திருக்கிறார்.

மேலும் முஸ்லிம்களுக்கு அமெரிக்க அரசு மீது நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பது பிரதான நோக்கமாக இருந்தாலும்  சர்வதேச அளவில் முன்னணியில் இருக்கும் முஸ்லிம் தொழிலதிபர்களுடன் அமெரிக்கா நேரடியாகத் தொடர்பு கொண்டால் அது வாணிபம் பெருக மிகுந்த உதவியாக இருக்கும், அதன் மூலம் அமெரிக்காவில் வேலைவாய்ப்பும் வருவாயும் பெருகும் என்பவை மற்ற நோக்கங்களாகும். இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும் பேசவிருக்கிறார்கள். அடுத்த முஸ்லிம் தொழிலதிபர்களின் கருத்துகளையும் இருவரும் கேட்பார்கள்.

இராணுவத் தகவல் தொடர்புக்கான தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் பென் ரோட்ஸ் இந்த மாநாட்டு ஏற்பாட்டில் முக்கியமானவர். முஸ்லிம் நாடுகளுடன் வலுவான வர்த்தக உறவு அவசியம் என்று அமெரிக்க அரசு கருதுவதாக சர்வதேச வர்த்தகத்துக்கான துணைச் செயலர் பிரான்சிஸ்கோ சாஞ்சஸ் தெரிவிக்கிறார். 2008-ம் ஆண்டில் முஸ்லிம் நாடுகளுடன் அமெரிக்கா நடத்திய வர்த்தகத்தின் மொத்த மதிப்பு 16 லட்சத்து இருபதாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் என்று சாஞ்சஸ் தெரிவிக்கிறார். வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, சுமுகமான நல்லுறவு ஆகியவற்றுக்கு இந்த மாநாடு பெரிதும் உதவும் என்பதால் ஒபாமா இதில் மிகுந்த ஆர்வம் செலுத்துகிறார் என்பது குறிப்பிட்த்தக்கது.

inneram.com

செக்ஸ் சாமியார் நித்யானந்தாவுக்கு உண்மை கண்டறியும் சோதனை!

நித்யானந்தா ஒத்துழைப்புக் கொடுக்க மறுத்து வருவதால், உண்மை கண்டறியும் சோதனை மூலம் விசாரணை நடத்த கர்நாடக போலீசார் முடிவு செய்துள்ளனர்.

நித்யானந்தாவிடம் 3வது நாளாக இன்று காலை 11 மணிக்கு கர்நாடக போலீசார் விசாரணையை தொடங்கினர். நித்யானந்தாவின் முன்னாள் சீடர்கள் லெனின் கருப்பன், அமெரிக்காவைச் சேர்ந்த டக்ளஸ் மெக்கல்லர் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நித்யானந்தாவுக்கு உதவியாளராக இருந்த கோபிகா தற்போது எங்கே இருக்கிறார். ரஞ்சிதா தலைமறைவாக இருக்கும் இடம் எங்கே போன்ற கேள்விகள் நித்யானந்தாவிடம் கேட்கப்பட இருக்கிறது.


இருப்பினும் நித்யானந்தா முழு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும், தியான நிலையில் இருப்பதாக நாடகம் ஆடுவதாகவும் கர்நாடக போலீசார் தெரிவித்துள்ளனர். மிகவும் அழுத்தக்காகராக இருப்பதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.


நித்யானந்தாவுக்கான போலீஸ் காவல் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைகிறது. ஆனால் நித்யானந்தா ஒத்துழைப்புக் கொடுக்க மறுத்து வருவதால், உண்மை கண்டறியும் சோதனை மூலம் விசாரணை நடத்துவதற்காக திங்கள் கிழமை அன்று நீதிமன்றத்தில் மனு செய்யவும் கர்நாடக போலீஸ் திட்டமிட்டுள்ளது.

இதனிடையே நித்யானந்தாவுக்கு எதிரான சாட்சிகளை பாதுகாப்பு கருதி, அவர்களுடைய வீட்டுக்கே நேரிடையாக சென்று காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து வாக்குமூலம் பெறப்படுவதாக கூறப்படுகிறது.

நித்யானந்தாவிடம் தற்போது நடத்தப்படும் விசாரணையில் எந்த உண்மையும் வெளிவராததால், உண்மை கண்டறியும் சோதனையில் உண்மைகள் அம்பலமாகும் என தெரிகிறது.

nakkheeran.