புதுடில்லி : “கல்லூரி வளாகத்திற்குள் புகை பிடிக்கும் மாணவர்களுக்கு, 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்’ என, டில்லி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
டில்லி பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளில், புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. முதல் கட்டமாக, கல்லூரி வளாகத்திற்குள் புகை பிடிக்கும் மாணவர்களுக்கு, 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவில் பல்கலை துணைவேந்தர் தீபக் பென்டல் கையெழுத்திட்டுள்ளார். இருந்தாலும், புகை பிடிக்கும் மாணவருக்கு அபராதம் விதிப்பதா, வேண்டாமா என்பதை சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகமே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டில்லி பல்கலைக்கழகத்தால் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு அமைப்பு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு சார்பில் ஒவ்வொரு கல்லூரியிலும், புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து, ஓவியம் வரைவது, பிரசாரம் மேற்கொள்வது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் விளக்கப்பட்டு வருகிறது. ஹன்ஸ்ராஸ் கல்லூரியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேராசிரியர் ஸ்ரீவத்சவ் என்பவர் பேசினார். அப்போது அவர், “புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை மாணவர்களுக்கு விளக்க வேண்டும். குறிப்பாக, கலாசார நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் நடத்துவது மூலமாக இதை மாணவர்களுக்கு புரிய வைக்கலாம். அபராதம் விதிப்பது என்பது கடைசிக் கட்ட நடவடிக்கையாகவே இருக்க வேண்டும்’ என்றார்.
நன்றி:dinamalar.com
Filed under: பொதுவானவை | Tagged: புகை பிடித்தால் அபராதம் | Leave a comment »