மக்கள் தொந்தரவால் தாகத்துடன் திரும்பும் ‘யானை கூட்டம்’

சத்தியமங்கலம் வனக்குட்டையில் யானைகள் தண்ணீர் குடிக்கும் இடத்தில் பொதுமக்கள் தினமும் கூட்டமாக நிற்பதால், யானைகள் தண்ணீர் குடிக்காமல் மீண்டும் வனப்பகுதிக்குள் தாகத்துடன் திரும்புகிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் காட்டுயானைகள், காட்டெருமைகள், புலி, சிறுத்தை, கரடி, செந்நாய், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் கூட்டம், கூட்டமாக வசித்து வருகின்றன.

தற்போது சத்தியமங்கலம் வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் வழியில் வனத்துறையினர் அமைத்துள்ள குட்டையில் தண்ணீர் தேடி காட்டு விலங்குகள் வருகின்றன.

தற்போது யானைகள் அதிகமாக வசிக்கும் சத்தியமங்கலம் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் தினமும் மாலை நேரத்தில் இந்த வனக்குட்டைக்கு தண்ணீர் குடிக்க யானைகள் படையெடுத்து வருகின்றது. இந்த காட்சியை காண மதியம் 3 மணி முதல் பண்ணாரி அருகே உள்ள வனக்குட்டை முன் இருகர மற்றும் நான்கு கர வாகனங்களை நிறுத்திக் கொண்டு பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.

வேடிக்கை பார்க்கும் பொதுமக்கள் யானைகள் தண்ணீர் குடிக்க குட்டைக்குள் வந்தவுடன் ஓ.. என்று சத்தமிடுவதும் அருகில் சென்று போட்டோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் யானைகள் பயந்து தண்ணீர் குடிக்காமல் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விடுகிறது.

யானைகளை தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறையினர் கூறுவதை பொதுமக்கள் கேட்பதில்லை.

நன்றி :

மஃப்டி போலீசாரை கட்டி வைத்து உதைத்த கிராம மக்கள்!

புளியங்குடி அருகே மணல் கடத்தலை தடுக்க சென்ற போலீசாரை ஊர்மக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்தனர்.

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள நிட்சபேச நதியிலிருந்து அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து புளியங்குடி டிஎஸ்பி பாஸ்கரன் உத்தரவின் பேரில் போலீசார் பூசைப்பாண்டி, மாணிக்கராஜ், வேலுச்சாமி, சிவலமுத்து ஆகிய 4 பேர் நள்ளிரவு சாதாரண உடையில் பைக்கில் ரோந்து சென்றனர்.

அப்போது நெல்கட்டும்செவலை சேர்ந்த சிலர் டிராக்டரில் மணல் அள்ளிக்கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த போலீசார் அவர்களை பின் தொடர்ந்து விரட்டி சென்றனர்.

ஆனால் அவர்கள் அதற்குள் ஊர் எல்லையை தொட்டு விட்டனர். தங்களை பின் தொடர்ந்து வருவது போலீசார் என தெரியாத அவர்கள் வேறு யாரோ தங்களை விரட்டி வருவதாக ஊருக்குள் சென்று தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து ஊர் மக்கள் திரண்டு வந்து 4 பேரையும் பிடிக்க முயன்றனர். இதில் போலீஸ் [^]காரர்கள் பூசைப்பாண்டி, மாணிக்கராஜ் ஆகியோர் மட்டும் சிக்கிக்கொண்டனர். மற்ற இருவரும் தப்பினர்.

ஆத்திரம் அடைந்த ஊர் மக்கள் பிடிப்பட்ட 2 பேரையும் மரத்தில் கட்டி வைத்து அடித்தனர். அப்போது அவர்கள் நாங்கள் இருவரும் போலீஸ்காரர்கள், அடிக்காதீர்கள் எனக் கூறி சத்தம் போட்டனர் ஆனாலும் மக்கள் விடவில்லை.

அதற்குள்ளாக, தகவல் அறிந்த டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று அவர்களை மீட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக நெல்கட்டும் செவலை சேர்ந்த 50 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த போலீஸ்காரர் சீவலமுத்து வாசுதேவநல்லூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நன்றி :