சிவசேனா குரங்குக் கூட்டம்! – காஜோல் காட்டம்

மும்பை: சிவசேனா ஒரு குரங்குக் கூட்டம். அவர்களின் அச்சுறுத்தலுக்கு அஞ்சமாட்டோம். நாங்கள் எப்போதும் ஷாரூக்கனான் பக்கம்தான் என்று கூறினார் நடிகை காஜோல்.

மும்பையில் பாகிஸ்தான் வீரர்களை விளையாட அனுமதிக்க மாட்டோம் என்று சிவசேனா அறிவித்தது. ஆனால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்கள் இடம் பெற வேண்டும் என்று பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் கூறினார்.

இதையடுத்து ஷாருக்கானுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா மிரட்டல் விடுத்தது. ‘ஷாருக்கானுக்கு தேசப்பற்று இல்லை. அவர் இந்தியத் தாயின் மகனல்ல… பாகிஸ்தான் வீரர்களை ஆதரித்துப்பேசிய தற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று சிவசேனா எச்சரித்தது. ஷாருக்கான் படங்களை மும்பையில் திரையிட விட மாட்டோம் என்றும் எச்சரித்தது.

ஆனால் ஷாருக்கான் மன்னிப்பு கேட்க மறுத்து விட்டார். இந்த நிலையில் ஷாருக்கான் இன்று மும்பை திரும்பினார். சிவசேனா போராட்டத்தை எதிர்க்கொள்ள தயார் என்று அவர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் ஷாருக்கானுக்கு இந்தி நடிகர், நடிகைகள் தங்களது ஒட்டு மொத்த ஆதரவை தெரிவித்துள்ளனர். ‘ஷாருக்கான் கருத்தில் எந்த தவறும் இல்ல’ என்று நடிகர், நடிகைகள் கூறி உள்ளனர். அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் தனது முழு ஆதரவை ஷாரூக்கானுக்கு வழங்கியுள்ளார்.

நடிகை காஜோல், ஷாருக்கானுக்கு ஆதரவு தெரிவித்ததோடு மட்டுமின்றி சிவசேனா கட்சியையும் கடுமையாக சாடி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் தளத்தில் இப்படி எழுதியுள்ளார்:

சிவசேனா கட்சி நமது நாட்டின் கோமாளிக் கூட்டமாக மாறியுள்ளது. அவர்கள் எப்போதும் வெறுப்பை மட்டுமே வெளியிட்டு வருகிறார்கள். இதைத் தவிர ஒன்றும் அவர்களுக்குத் தெரியாது.

சிவசேனாவை குரங்குகளின் படை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த குரங்கு படையால் எங்களை எதுவும் செய்ய இயலாது. தேர்தலில் தோல்வியை சந்தித்த பிறகும் அவர்கள் பாடம் கற்றுக் கொள்ள வில்லை.

இப்படிப்பட்ட அசிங்கம் பிடித்த அரசியலால் தான் நாம் உலகில் பின்னணியில் இருக்கிறோம். நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். அதன் மூலம் தான் நாம் ஜனநாயக சக்தியை உலகுக்கு காட்ட முடியும்…”என்று பொரிந்து தள்ளியுள்ளார் காஜோல்.

ஆமை, எலி, பூச்சிகளை விண்வெளிக்கு அனுப்பிய ஈரான்!

டெஹ்ரான்: ஈரான் தனது ராக்கெட் தொழில்நுட்ப வல்லமையை வெளிப்படுத்தும் வகையில் எலி, ஆமை மற்றும் பூச்சிகளை கொண்ட ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.

ஈரான் அதிபர் முகமது அகமதினிஜாத் கடந்த 3ம் தேதி இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஒரு எலி, இரண்டு ஆமைகள் மற்றும் பல்வேறு புழு வகைகளை ராக்கெட்டில் வைத்து அனுப்பியதன் மூலம் ஈரான் ஈடு இணையில்லாத அறிவியல் மைல்கல்லை தொட்டிருப்பதாக ஈரான் அதிபர் பெருமையாக கூறினார்.

விண்வெளிக்கு ஆமை அனுப்பியது ஈரானுக்கு இதுவே முதல் முறை. ஆனால், விண்வெளிக்கு உயிரனங்களை அனுப்புவது ஒன்றும் அறிவியல் துறையில் புதிதல்ல. கடந்த 1961ம் ஆண்டு பிரான்ஸ் முதல்முறையாக எலியை விண்வெளிக்கு அனுப்பியது.

இதைத்தொடர்ந்து சீனா 1964 மற்றும் 65ம் ஆண்டுகளில் சுண்டெலிகளை அனுப்பியது. சோவித் யூனியன் முதல்முறையாக ஆமையை 1968ல் விண்வெளிக்கு அனுப்பியது.

இதன் பின்னர் பல உயிரினங்கள் பல்வேறு நாடுகளின் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு உயிரியல் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஈரான் தனது ஆமைத்திட்டத்தை பெருமையாக அறிவித்திருப்பது ஏன் என்பது குறித்து நாசா விஞ்ஞானிகள் கூறுகையில்,

தனது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தொழில்நுட்ப வளர்ச்சியை ஈரான் அமைதியான முறையில் வெளிப்படுத்துகிறது. மத்திய கிழக்கில் உள்ள போர் முனையங்கள் மீது ஈரான் தனது ராக்கெட்டை செலுத்த முடியும் என்பதை தான் இந்த அறிவிப்பு வெளிப்படுத்துகிறது’ என்றனர்.

சிவசேனா போட்ட திட்டத்தை பொடிப்பொடியாக்கிய ராகுல் காந்தி


மும்பை: ராகுல் காந்திக்குக் கருப்புக் கொடி காட்டி, அவரது நிகழ்ச்சிகளை சீர்குலைத்து அதன் மூலம் தனது பலத்தைக் காட்ட சிவசேனா திட்டமிட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ராகுல் காந்தி போட்ட பலே திட்டம், அப்படியே சிவசேனாவை தடம் புரளச் செய்து விட்டது. மேலும் மும்பை மக்களிடையே ராகுல் காந்திக்கு திடீர் செல்வாக்கு உயரவும் காரணமாகி விட்டது.

ராகுல் காந்தியின் மும்பை பயணம் ஒரு சாதாரண பயணமாக மட்டும் இல்லாமல், சிவசேனா, மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சிகளுக்கு கடுமையாக விடப்பட்ட சவாலாகவும் மாறியுள்ளது.

பெரும் அமளியில் முடியும் என்று நாடே எதிர்பார்த்திருந்த நிலையில் அப்படியே மாறிப் போய், ஒட்டுமொத்த மும்பை மக்களின் ஆதரவையும் அப்படியே சம்பாதிதது விட்டார் ராகுல்.

மும்பைக்கு ஹெலிகாப்டரில் வந்த ராகுல் காந்தி, விலே பார்லே என்ற புறநகர்ப் பகுதியிலிருந்து கட்கோபர் வரைக்கும் மின்சார ரயிலில் பயணித்த அந்த சில நிமிடங்கள்தான் சிவசேனா சரிந்து போனதும், ராகுல் உயர்ந்து நின்றதற்கும் காரணமாக அமைந்தது.

ராகுல் இப்படி ரயிலில் பயணிப்பார் என்று யாருமே நினைக்கவில்லை – சிவசேனாவினர் உள்பட. படு துணிச்சலாக ரயிலில் ஏறிப் பயணம் செய்த ராகுலின் செயல் மும்பை மக்களுக்கு வியப்பையும், ஒட்டுமொத்த ஆதரவையும் தேடிக் கொடுத்து விட்டது.

மேலும் மராத்தி அரசியலின் மையப் புள்ளியாக கருதப்படும் தாதருக்கு அவர் சென்றதும் சிவசேனா, மகாராஷ்டிர நவ நிர்மான் சேனாவினரை பெரிதும் சரிவுக்குள்ளாக்கி விட்டது.

கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் மும்பையில் சுற்றினார் ராகுல். ஒரு இடத்தில் கூட அவரது நிகழ்ச்சிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ரயில் நிலையங்களில் மக்களை சந்தித்துப் பேசினார். ரயிலி்ல் பயணம் செய்தபோதும் மக்களிடம் பேசினார்.

மொத்தத்தில் அவர் சர்வ சுதந்திரமாக, எந்தவித அச்சுறுத்தலுக்கும், இடையூறுக்கும் ஆளாகாததே சிவசேனாவுக்கு பெரும் தோல்வி என்று கருதப்படுகிறது. காரணம் சிவசேனாவினரின் திட்டமே அதுவாகத்தான் இருந்தது. அதுவே நடக்காமல் போனதால் சிவசேனா சவ சவ சேனாவாகி விட்டது.

மேலும் சிவசேனாவினர் காட்டியக் கருப்புக் கொடிகளும் ராகுலை எந்தவகையிலும் பாதிக்கவில்லை. மாறாக மும்பை மக்கள் காட்டிய பாசக் கொடியால், சிவசேனாவினர் காட்டிய கருப்புக் கொடிகள், கலகலத்துப் போய் விட்டன.

ராகுல் பயணம் ஏற்படுத்திய பெரும் தாக்கம் குறித்து முதல்வர் அசோக் சவான் மகிழ்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ராகுல் காந்தி ரயிலில் பயணம் செய்வது என்பது திடீரென நடந்தது. அதுபோன்ற திட்டம் முன்பு இல்லை. திடீரெனதான் அவர் முடிவெடுத்தார்.

சேனா தோல்வியடைந்திருப்பது மிகவும் சந்தோஷமான ஒன்று. சிவசேனா- மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா போன்றோரின் அரசியலுக்கு சமூகத்தில் இடமில்லை என்பதை ராகுல் பயணம் நிரூபித்து விட்டது என்றார்.

ராகுல் காந்தியின் ரயில் பயணத் திட்டம் அவரது மனதில் கடைசி நேரத்தில் தோன்றியதாம். இதனால் அவரது பாதுகாப்பு அதிகாரிகளுக்கே அது தெரியவில்லை. குறிப்பாக மும்பை போலீஸ் உயர் அதிகாரிகளுக்குத்தான் பெரும் சிக்கலாகி விட்டதாம்.

அதேசமயம், கமிஷனர் சிவானந்தனுக்கு மட்டும் இது தெரியும் எனக் கூறப்படுகிறது. ராகுல் காந்தியின் பயணத்தின்போது சிவசேனாவினரால் எந்தவித இடையூறும் ஏற்படவில்லை என்பதே பெரும் மகிழ்ச்சியாக உணர்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் ராகுல் காந்தி…

இந்த நிலையில் ராகுல் காந்தி நேற்று மாலை புதுச்சேரிக்கு விசிட் அடித்தார்.

புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் ரூ.4 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்து மாணவர்களுடன் அவர் உரையாடினார்.

அப்போது மகாராஷ்டிர விவகாரம் குறித்து ஒரு மாணவர் கேள்வி கேட்டார்.

அதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி,

நாட்டில் அமைதியை விரும்பும் மக்கள் 99 சதவீதம் பேராக இருக்கின்றனர்.​ அவர்கள் மெளனமாக இருக்கின்றனர்.​ பிரிவினைவாதிகள் 1 சதவீதம் பேர்தான்.​ நம் நாடு ஜனநாயக நாடு.

பிரிவினைவாதிகளும் பேசுவதற்கு அனுமதி அளிக்கத்தான் வேண்டும்.​ அதனால்தான் அவர்களின் குரல் ஓங்கி ஒலிக்கிறது.​ அதைப் பற்றியெல்லாம் கவலைப்படக் கூடாது.​ நாம் இந்தியர்களாக இருக்க வேண்டும்.

இந்தப் பிரச்னையை விட்டுவிட்டு வேறு பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்.​ ஜவஹர்லால் நேரு சோஷலிசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.​ சோஷலிசக் ​ கொள்கையை இந்திரா காந்தி பின்பற்றினார் என்றார்.

நீங்கள் எது போன்ற கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்? என்ற கேள்விக்கு,

நேருவும்,​​ இந்திரா​ காந்​தி​யும் ஏழை மக்களுக்கு கல்வி,​​ சுகாதாரம் போன்ற வசதிகள் சென்று சேர வேண்டும் என்ற கொள்கை உடையவர்களாக இருந்தார்கள்.

என்னுடைய எதிர்கால கொள்கை என்று இப்போது எதுவும் சொல்வதற்கில்லை.​ ​ இருப்பினும் நாட்டின் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்குச் சென்று வருகிறேன்.

நம்நாட்டில் கிராமப்புறங்களில் வாழும் கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு நல்ல கல்வியும்,வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம்.

அப்போதுதான் நம் நாட்டின் முழு மனித வளத்தையும் பயன்படுத்தி வளர்ச்சியை எட்ட முடியும் என்றார் ராகுல்.

தொடர்ந்து அவர் கூறுகையில், அரசியலில் எல்லோரும் எளிதாக நுழைய முடியாது.​ யாராவது உறவினர்கள் இருக்க வேண்டும் அல்லது நண்பர்கள் இருக்க வேண்டும்.​ அப்படித்தான் அரசியல் இருக்கிறது.​ அதை மாற்றி எல்லாரும் அரசியலில் நுழைய முடியும் என்பதை நிலைநாட்டதான் இளைஞர் காங்கிரஸுக்கு உள்கட்சி தேர்தல் நடத்தி நிர்வாகிகளை நியமித்துள்ளோம்.

இந்தத் தேர்தலை எதிர்க்கட்சிகள்கூட பஞ்சாப்பிலும்,​​ கேரளத்திலும் வரவேற்று பின்பற்றியுள்ளன.​ எல்லாருக்கும் ஏதாவது ஒருவகையில் தலைமைப் பண்பு இருக்கிறது.​ அதனால் அரசியலுக்கு வர முடியும் என்றார் ராகுல்.

விலைவாசி கடுமையாக உயர்ந்து கொண்டே செல்கிறது.​ நல்ல உணவு கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது என்று ஒரு மாணவி கேட்டபோது,

உலக அளவில் இந்தப் பிரச்னை பேசப்பட்டு வருகிறது.​ இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் ஒரு சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.​ விரைவில் நிலைமை சீராகும்.

இப்போது நம் நாட்டில் தொழில்நுட்பத்துறை, சேவைத் துறைக்கு அளித்த முக்கியத்துவம் வேளாண்துறைக்குக் கொடுக்கப்படவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன்.​ இந்த நிலை மாற்றப்படவேண்டும் என்றார் ராகுல்.