பாகிஸ்தானுடனான பேச்சுக்களை தொடர இந்தியா முடிவு

இந்தியாவின் மும்பை நகரில் கடந்த 2008-ம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடன் இடைநிறுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர இந்தியா திட்டமிட்டுள்ளது.

இரு நாடுகளின் வெளியுறவுச் செயலர் நிலையிலான பேச்சுவார்த்தையைத் துவக்க இந்தியா திட்டமிட்டிருப்பதாக இந்திய வெளியுறவுச் செயலக அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். பயங்கரவாதம் உட்பட அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் பாகிஸ்தானுடன் பேசப்படும் என இந்திய ஊடகங்களுக்கு மற்ற அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

பேச்சுவார்த்தை நடத்தப்படும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், இந்தியா எதைப்பற்றிப் பேசத் தயாராக உள்ளது என்பது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் விளக்கம் கேட்டிருப்பாதக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

இதுதொடர்பாக, இந்தியாவின் சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமத் குரேஷி, பேச்சுவார்த்தை தொடர்பான விவரங்கள் இந்தியாவிடமிருந்து கிடைத்தபிறகு, தேதி முடிவு செய்யப்படும் என்றும், எல்லாப் பிரச்சினைகளையும் ஆக்கப்பூர்வமான வகையில் பேசித் தீர்த்துக் கொள்ள பாகிஸ்தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

காஷ்மீர் உள்பட இரு நாடுகளுக்கிடையிலான பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பேச்சுவார்த்தை துவங்கியது. ஆனால், கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து அந்தப் பேச்சுவார்த்தையை இந்தியா இடைநிறுத்தியது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாதிகள்தான் தாக்குதலை நடத்தியிருப்பதாகவும், அவர்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் வரை பேச்சுவார்த்தை கிடையாது என்றும் இந்தியா கூறிவந்தது.

இன்னும் இரு நாடுகளுக்கிடையே பரஸ்பர நம்பகத்தன்மை ஏற்படாவிட்டாலும், பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர வேண்டும் என்ற விருப்பம், இரு அரசுகளிடமும் இருப்பதாகக் கருதப்படுகிறது.