மும்பை தாக்குதலின் போது வடமாநில கமாண்டோக்கள்தான் உதவினர்: ராகுல்காந்தி

மும்பை தாக்குதலின் போது வடமாநில கமாண்டோக்கள்தான் உதவி செய்தனர் என்று மும்பை மராத்தியர்களுக்கே என்று கோஷமிடும் சிவசேனாவுக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மராட்டிய மாநிலத்தில் உள்ள சிவசேனா கட்சி அரசியல் பிழைப்புக்காக பிரிவினையை தூண்டும் வகையில் நடந்து வருகிறது. “மும்பை மராட்டியர்களுக்கே சொந்தமானது” என்ற கோஷத்தை சிவசேனா தலைவர் பால்தாக்கரே எழுப்பி உள்ளார்.

மும்பையில் உள்ள மராட்டியர்களுக்கே வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை கொடுக்க வேண்டும், மும்பையில் உள்ள மற்ற மாநில மக்கள் கண்டிப்பாக மராட்டிய மொழியை கற்க வேண்டும் என்றெல்லாம் சிவசேனா வலியுறுத்தி வருகிறது. இதற்கு தெண்டுல்கர் எதிர்ப்பு தெரிவித்தபோது, அவரை சிவசேனா தலைவர்கள் கடுமையாக திட்டி தீர்த்துவிட்டனர்.

சிவசேனாவின் மும்பை உரிமை கோரிக்கை மற்ற எல்லா கட்சிகளிடமும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. “மும்பை அனைவருக்கும் சொந்தமானது. இந்தியர்கள் அனைவரும் அங்கு வாழவும் பணியாற்றவும் உரிமை உள்ளது” என்று காங்கிரஸ் கூறியது.

சிவசேனா கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆர்.எஸ்.எஸ், “மும்பை நகரம், அனைத்து இந்தியர்களுக்கும் சொந்தமானது. மொழி அடிப்படையில் பிரச்சினை உண்டாக்குபவர்களிடம் இருந்து வடமாநில மக்களை ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் காப்பாற்ற வேண்டும்” என்று கருத்து வெளியிட்டது. இதற்கு பா.ஜ.க. ஆதரவு தெரிவித்தது.

பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி இது பற்றி கூறுகையில், “இந்தியர் எவரும் நாட்டின் எந்தப்பகுதியிலும் குடியேறி, தொழில் செய்து வாழலாம் என்பதில் பா.ஜ.க. உறுதியாக உள்ளது. மாநிலம், மொழி, மத அடிப்படையில் எந்தவித பாகுபாடும் காட்டப்படக்கூடாது, பிரிவினையை பா.ஜ.க. ஒருபோதும் ஏற்காது” என்றார்.

இதனால் பா.ஜ.க.- சிவசேனா கூட்டணியில் உரசல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மும்பை பற்றிய விமர்சனம் ராகுல்காந்திக்கும், சிவசேனாவுக்கும் இடையில் கடும் மோதலை உண்டாக்கியுள்ளது. பீகார் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, சிவசேனாவுக்கு கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:-

இந்தியா, இந்தியர்களுக்கு சொந்தமானது. இந்தியாவின் ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு இந்தியனுக்கும் உரிமை உடையது. பால்தாக்கரே அல்லது ராஜ் தாக்கரே போன்றவர்கள் சொல்லும் கருத்துக்களில் நான் ஆர்வம் காட்டுவதில்லை.

இந்திய மக்கள், இந்தியாவின் எந்த பகுதிக்கு செல்லவும் உரிமை இருக்கிறது. பீகார், உத்தரபிரதேச மக்கள் மராட்டியத்துக்குள் வரக்கூடாது என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை. பீகார், உத்தரபிரதேச மக்களை மராட்டியத்துக்குள் வரவிடாமல் தடுத்தால் என்னால் பொறுமையாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

மும்பை மராட்டியர் களுக்கே சொந்தம் என்று வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது மராட்டிய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மராட்டியத்தில் வடமாநில மக்களுக்கு இடம் இல்லை என்று கூறப்படுவதை நான் முழுமையாக எதிர்க்கிறேன்.

மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போது உத்தரபிரதேசம், பீகார் உள்பட எல்லா மாநிலத்தை சேர்ந்த கமாண்டோ வீரர்களும் இருந்தனர். அவர்கள் தான் மும்பை மக்களை காப்பாற்றினார்கள். அந்த சமயத்தில் வடமாநில கமாண்டோக்கள் மும்பையை விட்டு வெளியேறுங்கள் என்று ஏன் சொல்லவில்லை.

இந்தியா இப்போது வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. குறுகிய மனப்பான்மையை கைவிட வேண்டும். எல்லாரும் சேர்ந்து முன்னேறுவோம்.

இவ்வாறு ராகுல்காந்தி கூறினார்.

ராகுல்காந்தியின் பேட்டி சிவசேனா தலைவர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தவ்தாக்கரே இன்று காலை மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மும்பை தாக்குதலின்போது ஹேமந்த் தாக்கரே, அசோக் காம்தே, விஜய் கவஸ்கர், துக்காராம் உள்பட பலர் தங்கள் உயிரை கொடுத்து தியாகம் செய்தனர். அவர்களது தியாகத்தை ராகுல்காந்தி அவமதித்துவிட்டார்.

மும்பை மக்களுக்கு எதிராக ராகுல் பேசுவதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.
மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது ராகுல்காந்தி எங்கே போனார்?

இவ்வாறு உத்தவ்தாக்கரே கூறினார்.